ARTICLE AD BOX
கோடை காலத்தில் நம் உணவில் அவசியம் சின்ன வெங்காயம் இடம்பெறுவதை உறுதி செய்ய வேண்டும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார். ஏனெனில், சின்ன வெங்காயத்தில் நிறைய மருத்துவ குணங்கள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
சின்ன வெங்காயத்தில் அலிசின் மற்றும் சல்ஃபர் ஆகியவை இருக்கின்றன. இவை, இரத்தத்தில் இருக்கும் நச்சுகளை அகற்றி, குடல் பகுதியை சுத்தப்படுத்த உதவி செய்கின்றன. மேலும், இரத்தத்தை மிகவும் அடர்த்தியாக்காமல் அவற்றை இயல்பாக வைத்திருக்கவும் சின்ன வெங்காயம் பயன்படுகிறது.
அந்த வகையில், தினசரி மதிய உணவில் சுமார் 3 சின்ன வெங்காயத்தையும் சேர்த்து சாப்பிடலாம் என மருத்துவர் நித்யா தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் சின்ன வெங்காயம் சாப்பிடும் போது சிலருக்கு சளி பிடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. எனவே, மதிய நேரத்தில் இதனை சாப்பிடலாம்.
இது தவிர சின்ன வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அத்துடன் கருப்பட்டி சேர்த்து பாகு போன்று காய்த்து, தினசரி ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். நெஞ்சு சளி இருப்பவர்கள், பசியின்மை இருப்பவர்கள் ஆகியோர் இதனை எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரக கோளாறு இருப்பவர்களுக்கும் இது மருந்தாக செயல்படுகிறது.
உடல் எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கும் சின்ன வெங்காயம் பயன்படுகிறது. சின்ன வெங்காயத்தை அரைத்து 20 மில்லி லிட்டர் அளவிற்கு சாறு எடுக்க வேண்டும். இத்துடன் 200 மில்லி லிட்டர் தண்ணீர், சிறிதளவு எலுமிச்சை சாறு, புதினா இலைகள் மற்றும் இரண்டு அல்லது மூன்று சிட்டிகை இந்துப்பு சேர்த்து தினசரி காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ச்சியாக குடித்தால் உடல் எடையை குறைக்க முடியும் என மருத்துவர் நித்யா அறிவுறுத்துகிறார்.