ARTICLE AD BOX
உடல் எடை அதிகரிப்பு தற்போது உலகளாவிய பிரச்சனையாக இருந்து வருகிறது. உடல் எடை குறைப்புக்கு உணவுக் கட்டுப்பாடு அவசிமான ஒன்றாக இருக்கிறது. சரியான உணவுகளை சரியான நேரத்தில் எடுத்து வருவதும், தினசரி உடற்பயிற்சியும் உடல் வெகுவாக குறைய உதவுகிறது.
அந்த வகையில், சமையல் கலை வல்லுநரான செஃப் தீனா தனது யூடியூப் பக்கத்தில் உடல் எடையை குறைக்க உதவும் சூப் ரெசிபி ஒன்றைப் பகிர்ந்துள்ளார். இந்த ரெசிபியை சென்னையைச் சேர்ந்த இந்திரா நாராயணன் என்பவர் தயார் செய்கிறார்.
இந்த சூப் பற்றி அவர் கூறும்போது, இரவு 7 மணிக்கு இந்த சூப் சாப்பிட்ட பிறகு, சிறிது நேரம் நடைப்பயிற்சி செய்து விட்டு தூங்கினால் காலையில் புத்துணர்ச்சியாக இருக்கலாம் என்கிறார். மேலும், அன்றாட இதுபோன்ற சிறுதானிய உணவுகளை எடுத்துக் கொண்டால் உடல் எடையை படிப்படியாக எளிதில் குறைக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேவையான பொருள்கள்:
ராகி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 1
காலிஃபிளவர், கேரட், பீன்ஸ் காய்கறிகள் - 1 கப்
முருங்கைக்கீரை - 1 கப்
தேங்காய் பால் - 2 கப்
வெள்ளை அல்லது கருப்பு மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஆம்சூர் தூள் - 1 சிட்டிகை
ஆளி விதை பொடி - 1 டேபிள் ஸ்பூன்
தேவையான அளவு உப்பு
கடலை எண்ணெய் - ஒரு குழிக் கரண்டி
நீங்கள் செய்ய வேண்டியவை:
ஒரு கனமான கடாய் எடுத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடேற்றவும். அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்க்கவும். வெங்காயம் விரும்பாதவர்கள் தவிர்த்து விடலாம். இதன்பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்க்கவும். இவற்றை சிறிது நேரம் வதக்கி விட்டு, சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
காய்கறி ஓரளவுக்கு வெந்து வந்தவுடன் முருங்கைக்கீரை சேர்க்கவும். இவற்றுடன் வேக வைத்த முளைக்கட்டிய பச்சைப் பயிறு சேர்க்கவும். பிறகு தண்ணீரில் கரைத்த ராகி மாவு சேர்க்கவும். அதனுடன் கொஞ்சம் கொஞ்சமாக தேங்காய்ப்பால் சேர்க்கவும்.
இதன்பிறகு அரைக்கப் தண்ணீர் சேர்க்கவும். தொடர்ந்து மிளகுத்தூள், ஆம்சூர் தூள், ஆளி விதை பொடி சேர்த்து கலந்து விடவும். கடைசியாக தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விட்டால் உடல் எடையைக் குறைக்கும் சூப் ரெடி.