ARTICLE AD BOX
உடலுறுப்புகளைத் தானம் பெற்று பாதிக்கப்பட்டவர்களுக்குப் பொருத்தும் சேவையில், தமிழகம் புதிய சாதனை படைத்திருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அதாவது, கடந்த 2024ஆம் ஆண்டு மட்டும் தமிழகத்தில் 268 பேரின் உடலுறுப்புகள் தானம் பெறப்பட்டுப் புதிய உச்சத்தைத் தொட்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில்,
"தமிழ்நாட்டின் மூளைச்சாவு நபர்களின் உறுப்புக்கொடை என்ற உன்னதத் திட்டம் 2024 ஆம் ஆண்டு ஒரு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த ஓராண்டில் (2024) மட்டும் 268 மூளைச்சாவு ஏற்பட்ட நபர்கள் உறுப்புக்கொடை அளித்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 1,500 உறுப்புகள் மற்றும் திசுக்கள் கொடையாகப் பெறப்பட்டுத் தேவையான நோயாளிகளுக்குப் பொருத்தப்பட்டுள்ளன.
மூளைச்சாவு உறுப்புக் கொடைத்திட்டம் தொடங்கப்பட்டது முதல், இந்திய அளவில், ஓராண்டில், ஒரு மாநிலத்தில் மட்டுமே இந்த அளவுக்கு கொடை நிகழ்ந்துள்ளது.
இம்மாபெரும் சாதனை சாத்தியமானதற்கான காரணம், நம்முடைய முதல்வர் அவர்களின் 'உடல் உறுப்புத் தானம் செய்தோரின் திருவுடல்களுக்கு அரசு மரியாதை செய்யப்படும்' எனும் உன்னதமான வரலாற்றுச் சிறப்பு மிக்க ‘அரசாணையே’ ஆகும்,"
என்று தெரிவித்துள்ளார்.