ARTICLE AD BOX
பருவ மாற்றம் காரணமாக சாதாரண சளி, காய்ச்சல் போன்ற உடல்நலப் பிரச்சினைகளை அதிகரிக்கும். அதனால் சீசனில் ஏற்படும் உடல் மாற்றம், ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண தான் அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால் எந்த சீசனாக இருந்தாலும் நம்முடைய உடலில் நீரின் அளவு சரியாக தான் உள்ளதா? அல்லது நீர்ச்சத்து குறைந்துள்ளதா என்பதை கவனிக்க பெரும்பாலானவர்கள் மறந்து விடுகிறார்கள். இதனால் குளிர்காலம், மழைக்காலங்களில் தாகம் எடுக்கா விட்டால் தண்ணீர் குடிப்பதையே மறந்து விடுகிறார்கள்.
போதிய அளவில் தண்ணீர் குடிக்காததால் நீர்ச்சத்து குறைவது, போதிய அளவு மினரல்கள் இல்லாமல் போவது என பலவிதமான பிரச்சனைகளை பலரும் சந்திக்க வேண்டி உள்ளது. இது நோய் ஏற்பட்டால் கூட உடல் விரைவாக குணமடைவதை பாதிக்கக்கூடும். உங்கள் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளதா என்பதை எளிதாக கண்டுபிடிக்க வழிகளை தெரிந்து கொள்ளலாம்.
நீர்ச்சத்தின் அளவை கண்டறியும் எளிய முறைகள் :
1. தோல் பரிசோதனை :
உங்கள் கைமுட்டியின் பின்புறத்தில் தோலை மெதுவாக அழுத்தி, ஒரு விநாடி வைத்திருந்து, பிறகு விடுங்கள். தோல் தானாக இயல்பான நிலைக்கு உடனடியாக திரும்பினால் உங்களின் உடலில் நீர்ச்சத்து போதிய அளவில் உள்ளதாக அர்த்தம். ஒரு வேளை, தோல் இயல்பு நிலைக்கு திரும்ப அதிக நேரம் எடுத்துக் கொண்டால், உங்கள் உடலுக்கு தேவையான நீர்ச்சத்து இல்லாமல் உள்ளதாக அர்த்தம்.
2. நாக்கு சோதனை :
கண்ணாடியில் உங்கள் நாக்கைப் பாருங்கள். அது வறண்டதாகவோ அல்லது வெள்ளை படலம் கொண்டதாகவோ இருந்தால், உங்கள் உடலுக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
3. வியர்வை மற்றும் சிறுநீர் நிறம் சோதனை :
உங்களுக்கு வழக்கத்தை விட குறைவாக வியர்க்கிறதா? குறிப்பாக சூடான சூழலிலும் குறைவாக வியர்க்கிறதா? இது உங்கள் உடலில் நீர்ச்சத்து வெகுவாக குறைந்துள்ளது என்பதற்காக சரியான அறிகுறியாகும்.
இருண்ட மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வெளியேறுகிறது என்றால் உங்கள் உடலில் நீர்ச்சத்து குறைந்துள்ளது. நீங்கள் அதிகமான நீர் குடிக்க வேண்டும் என்பதை உறதி செய்து கொள்ள வேண்டும்.
இந்த மூன்று அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் உடனடியாக டம்ளர் தண்ணீரை குடித்து விடுங்கள். அதோடு தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக குடிக்க வேண்டும்.
நீர்ச்சத்து என்றால் என்ன?
உடலில் ரத்த ஓட்டம் உள்ள இயக்கங்கள் சீராக நடைபெறுவதற்கு உடலுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் தேவைப்படுகிறது. இது உடலை சமநிலையில் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. அதிக வியர்வை, போதிய அளவில் தண்ணீர் குடிக்காதது, நோய்கள் மற்றும் பருவ மாற்றங்கள் ஆகியவற்றால் உடலில் நீர்ச்சத்து குறையும் நிலை உருவாகலாம். ஆனால் உடலில் உள்ள நீர்த்தன்மையை சமநிலையில் வைத்திருப்பதற்காக தினசரி நாம் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீரின் அளவு உடலில் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டம்.
நீர்ச்சத்து குறைவதற்கான அறிகுறிகள்:
வாய் வறள்தல்
மயக்கம்
உடல் சோர்வு
தலைவலி
குறைந்த சிறுநீர் வெளியேற்றம்
கடுமையாக நீர்ச்சத்து குறையும் போது சிறுநீரக கோளாறுகள், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் மற்றும் இரத்த அழுத்தம் குறைவு போன்ற தீவிர பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.
உடல் நீரின் அளவை பராமரிக்க எளிய வழிகள் :
* போதுமான அளவில் தண்ணீர் குடிக்கவும் – தினமும் குறைந்தது 8 முதல் 10 டம்ளர்கள் வரை நீர் குடிக்க வேண்டும். சீசன் மாறுவதற்கு ஏற்ப, நம்முடைய உடல் இயக்கத்திற்கு ஏற்ப இந்த அளவை அதிகரிக்க செய்யலாம்.
* நீர் நிறைந்த உணவுகள் – வெள்ளரிக்காய், ஆரஞ்சு, தர்பூசணி போன்ற நீர் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகமாக உட்கொள்ள வேண்டும்.
* சிறுநீர் நிறத்தை கவனிக்கவும் – ஒளி மஞ்சள் நிற சிறுநீர் நல்ல ஈரப்பதத்தைக் குறிக்கிறது. ஆனால் இருண்ட மஞ்சள் நிறம் நீர்ச்சத்து குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுகிறது.
* காஃபீன் மற்றும் சர்க்கரை அதிகமுள்ள பானங்களை குறைக்கவும் – அதிக அளவு காபி, டீ, மற்றும் கார்போனேற்றப்பட்ட பானங்கள் உடலில் வறட்சியை ஏற்படுத்தி, நீர்ச்சத்தின் அளவை குறைக்க செய்து விடும்.
* நீர் குடிப்பதை நினைவூட்டுங்கள் – நீர் குடிக்க மறந்து விடுவோருக்கு, ஒவ்வொரு மணிநேரத்திற்கும் சிறிதளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை நினைவுபடுத்த அலாரம் போன்றவற்றை வைத்து தண்ணீர் குடிக்கும் வழக்கத்தை ஏற்படுத்துங்கள்.
* உடல் ஈரப்பதத்தை பராமரிப்பது முக்கியம், இது உடல் சக்தியை அதிகரிக்க, செரிமானத்தை அதிகப்படுத்த மற்றும் சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.