ARTICLE AD BOX
உச்சநீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வலியுறுத்தியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75-வது ஆண்டு விழா மற்றும் சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் 160-வது ஆண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சென்னை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சிறப்பு மலரினை வெளியிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். நீதிமன்றங்களின் கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அரசியல் சாசனத்தை பாதுகாப்பதில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய பங்காற்றி வருவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார். மாநிலங்களின் உரிமைகளை பாதுகாப்பதில் நீதித்துறை முக்கிய பங்கு வகிப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். திராவிடமாடல் ஆட்சி அமைந்த பின்னர் 73 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஆணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் புதிய சட்டக்கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.