ARTICLE AD BOX
சில நேரங்களில் உங்களை ஒருவர் முதல் முறையாக பார்த்துப் பேசும்போதே அவருக்கு உங்களைப் பிடிக்காமல் போய்விடும். அதற்கான காரணம் நீங்கள் பின்பற்றும் ஒரு சாதாரணப் பழக்கமாகக் கூட இருக்கலாம். உங்களுக்கு அது தவறானதாகப் படாது. ஆனால் பிறர் மனதில் அது விரும்பத்தகாத ஒன்றாக தோற்றமளித்து அவரை உங்களை விட்டு விலகி நிற்கச் செய்துவிடும். அவ்வாறான பழக்கங்களில் 7 விதமானவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.
1. ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் குறுக்கிட்டுப் பேசுதல்:
மூன்று, நான்கு பேர் சேர்ந்திருக்கையில், ஒருவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது நீங்கள் உங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்ள காத்திருக்காமல், இடையில் குறுக்கிட்டுப் பேசுவது அங்கிருக்கும் எவருக்குமே பிடிக்காது. இது அவர்களுக்கு எரிச்சலை உண்டுபண்ணுவதோடு நீங்கள் அவர்கள் பேச்சை கவனிக்கவில்லை என்ற எண்ணத்தையும் தோன்றச் செய்யும். கொஞ்சம் பொறுமையை கடைப்பிடித்தால் இந்த பழக்கத்தை சுலபமாக மாற்றிக் கொள்ளலாம்.
2. எப்பொழுதும் தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பது:
ஒருவர் ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசுகையில் நீங்க நடுவில் புகுந்து, அதே சாயலில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர முற்படுவதும் விரும்பத் தகாததொரு செயலேயாகும். பிறர் கூறுவதை முழுவதுமாகக் கேட்ட பின், அது சம்பந்தமாக கேள்வி கேட்டு அவரிடமிருந்து விளக்கம் பெறுவீர்களானால் அவருக்கு உங்கள் மீது மதிப்பு உயரும். தன்னைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் இந்த சிறிய பழக்கத்தை உணர்ந்து அதனை விட்டுவிட்டால் பிறர் விரும்பக் கூடிய ஆளாய் மாறிவிடலாம்.
3. மற்றவர்களின் பெயரை மறந்து விடுதல்:
சில நேரங்களில் ஒருவர் அவரின் பெயரை உங்களிடம் ஏற்கெனவே கூறியிருந்தபோதும் மறுமுறை அவரை சந்திக்கும்போது அதை நீங்க மறந்துவிட்டால் அவர் உங்களுக்கு முக்கியமானவர் அல்ல என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றும். இதற்கு அவரை சந்தித்த பின் அவரின் பெயரை இரண்டு மூன்று முறை மனதிற்குள் சொல்லிப் பார்ப்பது அல்லது அவருடன் சம்பந்தப்பட்ட ஏதாவதொரு நிகழ்வை மனதில் இறுத்தி அவர் பெயரை நினைவில் வைக்க முயல்வது நேர்மறை விளைவை உண்டுபண்ணக்கூடும்.
4. ஒருவரைப் பாராட்டுவது போல் மறைமுகமாக அவமானப்படச் செய்வது (Backhanded compliments):
ஒருவரைப் பார்த்து, "உங்க வயசுக்கு நீங்க ஸ்மார்ட்டா இருக்கீங்க" என்று கூறுவது, மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது அவரைப் பாராட்டுவது போல் தோன்றினாலும், ஆழ்ந்து நோக்கும்போது, தேவையின்றி அவரது வயதை நீங்கள் அங்கு மறைமுகமாக சுட்டிக்காட்டுவது அனைவருக்கும் புரியாமலிருக்காது. அடுத்த முறை அந்த நபர் உங்களை சந்திப்பதை நிச்சயம் தவிர்ப்பார்.
5. நீங்கள் தவறு செய்யும்போது அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுப்பது:
நீங்கள் ஒரு தவறை செய்துவிட்டு பிறர் அதை சுட்டிக் காட்டும்போது, நீங்கள் அந்த தவறை ஒத்துக்கொள்ளாமல் அதை நியாயப்படுத்த முயல்வீர்களானால் அனைவருக்குமே உங்களைப் பிடிக்காமல் போய்விடும். உண்மையை விட உங்கள் ஈகோதான் உங்களுக்குப் பெரிதாகத் தெரிவது அனைவருக்கும் தெரிந்துவிடும். அதற்குப் பதில், "நீங்க சொல்றது சரி. நான் அதை வேறு விதமாக கையாண்டிருக்க வேண்டும்" என்று கூறியிருந்தால் உங்க மதிப்பும் மரியாதையும் கூடியிருக்கும்.
6. எப்பொழுதும் மற்றவரை விட தான் ஒரு படி மேல் என்ற தொனியில் பேசிக்கொண்டிருப்பது:
நீங்க அனுபவித்த ஏதாவது ஒரு விஷயத்தைப் பற்றி சிலாகித்துப் பேசும்போது பிறர் எரிச்சல் படக்கூடும். ஏனெனில், நல்லதோ கெட்டதோ, அதே விஷயத்தில் அவர்களுக்கு இரண்டு மடங்கு அனுபவம் ஏற்பட்டிருக்கக் கூடும். எனவே, நீங்களே பேசிக் கொண்டிராமல் மற்றவர் கூறுவதையும் கேட்டு, "ஓ.. அப்படியா" என்று பதிலளித்தால் உங்கள் மீது மதிப்பு கூடும்.
7. எந்த நேரமும் எதிர்மறையான எண்ணங்களையே வெளிப்படுத்துதல்:
பிறருடன் சேர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் எப்பொழுதும் எதைப்பற்றியாவது எதிர்மறையான விமர்சனம் அல்லது குற்றம் குறை கூறிக்கொண்டேயிருப்பது மற்றவரை உங்களிடமிருந்து விலகி நிற்கச் செய்யவே உதவும். சூழ்நிலையின் நல்ல பகுதிகளை நம்பிக்கையோடும் நன்றியோடும் எதிர்நோக்கி, விருப்பு வெறுப்புகளை சமநிலைப்படுத்தி பேச்சில் கலந்து கொள்ளும்போது அனைவருக்கும் உங்களைப் பிடித்துப் போகும்.
நம் தினசரி வாழ்க்கையில் சிறு சிறு விஷயங்களில் ஈகோ பார்க்காமல் விட்டுக்கொடுக்கவும் சமாதானமாகப் போகவும் கற்றுக்கொண்டால் நாம் அனைவராலும் விரும்பப்படும் நபராக விளங்கலாம்.