ARTICLE AD BOX
உங்க சம்பள உயர்வில் கைவைக்கும் டொனால்டு டிரம்ப்.. மாத சம்பளக்காரர்களே உஷார்..
பொதுவாக நிறுவனங்கள் ஆண்டுதோறும் தங்களிடம் பணிபுரியும் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிப்பது வாடிக்கையான ஒன்று. நடப்பு 2025ம் ஆண்டிலும் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும் ஆனால் கடந்த ஆண்டை காட்டிலும் சம்பள உயர்வு விகிதம் குறைவாக இருக்கும் என்று சர்வதேச உலகளாவிய தொழில்முறை சேவை நிறுவனமான ஆன் தெரிவித்துள்ளது. இது 2022ம் ஆண்டு முதல் சம்பள உயர்வுகளில் நிலவும் சரிவு போக்கை இது பிரதிபலிக்கிறது.
ஆன் நிறுவனம் இந்தியாவில் 45 துறைகளில் 1,400க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் தரவுகளை பகுப்பாய்வு செய்து, ஆண்டு சம்பள உயர்வு மற்றும் வருவாய் கணக்கெடுப்பு 2024-25 அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், 2021ம் ஆண்டில் அதிக அளவிலான பணியாளர்கள் தங்கள் வேலைகளை ராஜினாமா செய்தனர். கோவிட் காலத்தில், பெரிய எண்ணிக்கையிலான ஊழியர்கள் தாங்களாகவே முன்வந்து வேலையை விட்டு வெளியேறினர். இது, பணியாளர்களை தக்கவைத்து கொள்ள வேறுவழியின்றி நிறுவனங்களை சம்பளத்தை அதிகரிக்க தூண்டின. இதனையடுத்து 2022ம் ஆண்டில் நிறுவனங்கள் பணியாளர்களுக்கு சராசரியாக 10.6 சதவீத சம்பள உயர்வை வழங்கின. ஆனால் அதற்கு அடுத்த ஆண்டுகளில் நிறுவனங்கள் சம்பள உயர்வு விகிதத்தை படிப்படியாக குறைத்து வந்தன. 2024ம் ஆண்டில் பணியாளர்களுக்கு சராசரியாக 9.3 சதவீத சம்பள உயர்வை மட்டுமே நிறுவனங்கள் வழங்கின.

2025ம் ஆண்டில் இந்திய நிறுவனங்கள் சராசரியாக 9.2 சதவீத அளவுக்கு சம்பள உயர்வு அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள், செயற்கை நுண்ணறிவு துறையின் அசூர வளர்ச்சி மற்றும் அமெரிக்க அதிபர் டிரம்பின் அதிரடியான வர்த்தக கொள்கைகளின் (இறக்குமதிக்கு கூடுதல் வரி) தாக்கம் போன்ற காரணங்களால் நிறுவனங்கள் மிகுந்த எச்சரிக்கை எடுப்பதால் இந்த ஆண்டில் நிறுவனங்கள் சராசரியாக 9.2 சதவீத அளவுக்கே சம்பள உயர்வை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேசமயம், தொழில்துறையை பொறுத்து இந்த சம்பள உயர்வு விகிதம் மாறுபடும். உதாரணமாக பொறியியல் வடிவமைப்பு, சேவைகள், வாகன உற்பத்தி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் குறைந்தபட்சம் 10 சதவீதம் சம்பள உயர்வு வழங்க பரிசீலித்து வருகின்றன. அதேசமயம் சர்வதேச திறன் மையங்கள், ரியல் எஸ்டேட் துறையை சேர்ந்த நிறுவனங்கள் 9.7 சதவீத அளவுக்கே சம்பள உயர்வு நடவடிக்கை மேற்கொள்ளும். லைஃப் சயின்ஸ் மற்றும் புரோபஷனல் சேவை நிறுவனங்கள் தலா 9.5 சதவீத சம்பள உயர்வு அளிக்கலாம். மேலும் பணியாளர் விலகல் அளவுகள் 17.7 சதவீதமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 2024ல் 18.7 சதவீதமாக இருந்தது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Story written by: Subramanian