ARTICLE AD BOX
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பல பில்லியன் டாலர் சொத்து வைத்துள்ள ஓஸ்வால் குரூப் குளோபல் நிறுவனத்தின் உரிமையாளர்களான பங்கஜ் மற்றும் ராதிகா ஓஸ்வால் ஆகியோரின் மகள்தான் வசுந்தரா ஓஸ்வால். இவர் சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் இளங்கலை பட்டம் பெற்றார். கல்லூரிப் படிப்பின்போதே அவர் டாலர் 200 மில்லியன் மதிப்புள்ள உலகின் மிக விலையுயர்ந்த வில்லாவில்தான் வசித்து வந்தார்.
படிப்பிற்குப் பிறகு அவர் 2020இல், PRO இண்டஸ்ட்ரீஸ் குழுவின் தலைவராக பணியில் இணைந்தார். PRO இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைமை ஏற்ற முதல் பெண் என்ற சாதனையைப் படைத்தார். அவர் தற்போது பிஆர்ஓ இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநராக (நிதி) பணியாற்றுகிறார். அவரது தலைமையின் கீழ், PRO இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப் பெரியளவில் வளர்ந்தது. அவர் PRO இண்டஸ்ட்ரீஸ் கடனை வெகுவாக குறைத்தார். மேலும், நிறுவனத்தை வலிமையாக மாற்றினார்.
இந்த நிலையில், தனது தந்தையின் முன்னாள் ஊழியரைக் கடத்தி கொலை செய்ததாகப் பொய்யான குற்றச்சாட்டில் வசுந்தரா ஓஸ்வால் மூன்று வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இருப்பினும், விசாரணையில், அந்த முன்னாள் ஊழியர் பிறகு தான்சானியாவில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பிறகே அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. 26 வயதான ஓஸ்வால் அதிபயங்கர கொலை மற்றும் கடத்தல் குற்றவாளிகளுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் உகாண்டாவில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வசுந்தரா ஓஸ்வால் தற்போது பேசியுள்ளார். அவர், "என்னை முதலில் 5 நாட்கள் தடுப்பு காவலில் வைத்தனர். தொடர்ந்து இரண்டு வாரங்கள் சிறையில் அடைத்தனர். அப்போது மனித உரிமைகளை மீறும் வகையில் செயல்பட்டனர். அவர்கள் என்னைக் குளிக்க அனுமதிக்கவில்லை. எனக்கு உணவு மற்றும் தண்ணீர்கூட தரவில்லை. உணவு, தண்ணீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைத் தருவதற்குக்கூட என் பெற்றோர் போலீஸ் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒருகட்டத்தில், தண்டனை கொடுக்கும் விதமாகக் கழிவறையைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கவில்லை. உகாண்டா காவல்துறையினர் தனது வீட்டை வாரண்ட் இல்லாமல் சோதனை செய்தனர்” என உகாண்டா போலீசார் தன்னைக் கொடுமைப்படுத்திய விஷயங்கள் குறித்து தெரிவித்துள்ளார்.