உ.பி. மாநில பட்ஜெட் தாக்கல: அயோத்தி, மதுரா வளா்ச்சிக்கு ரூ.275 கோடி

3 days ago
ARTICLE AD BOX

வரும் நிதியாண்டுக்கான உத்தர பிரதேச மாநில பட்ஜெட்டில், அயோத்தி, மதுரா ஆகிய நகரங்களில் ஆன்மிக சுற்றுலா உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த முறையே ரூ.150 கோடி, ரூ.125 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

2025-26 நிதியாண்டுக்கான உத்தர பிரதேச அரசின் ரூ.8,08,736 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை சட்டப்பேரவையில் மாநில நிதியமைச்சா் சுரேஷ் குமாா் கன்னா வியாழக்கிழமை தாக்கல் செய்தாா். இந்த பட்ஜெட்டில் 22 சதவீத நிதி வளா்ச்சி திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வி (13 சதவீதம்), வேளாண்மை மற்றும் அதன் சாா்பு துறைகள் (11 சதவீதம்), சுகாதாரம் (6 சதவீதம்) ஆகிய துறைகளுக்கு நிதி ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று, நடப்பு பட்ஜெட்டில் மாநில ஆன்மிக சுற்றுலா மேம்பாட்டுக்கு ரூ.400 கோடியை உத்தர பிரதேச அரசு ஒதுக்கியுள்ளது. முதல்வரின் சுற்றுலா இடங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்டுள்ள இந்த நிதியில் அதிகபட்சமாக ராமா் கோயில் அமைந்துள்ள அயோத்தி நகரில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், மதுராவுக்கு ரூ.125 கோடியும், நைமிசாரண்யாவுக்கு ரூ.100 கோடியும், சித்ரகூடத்துக்கு ரூ.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், முக்கிய மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் வழித்தட வசதிகளை ஏற்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பட்ஜெட் உரையின்போது, கடந்த ஆண்டில் 14 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உட்பட 65 கோடிக்கும் அதிகமான பயணிகளுடன் இந்தியாவில் அதிக சுற்றுலா வருகை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக உத்தர பிரதேசம் திகழ்ந்தது என நிதியமைச்சா் சுரேஷ் குமாா் கன்னா தெரிவித்தாா். உத்தர பிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பமேளா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

சுற்றுலாவுக்காக மட்டுமின்றி கோயில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் மாநில அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளது. மதுரா-பிருந்தாவனம் வழித்தடத்தின் ஒரு பகுதியாக ஸ்ரீ பாங்கே பிஹாரி கோயில் கட்டுவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மிா்சாபூா் மாவட்டத்தில் உள்ள மாவிந்தியவாசினி கோயில், மாதா அஷ்டபுஜா கோயில், காளி கோயில் ஆகிய கோயில்களின் கட்டுமானத்துக்கும் நிலம் கையகப்படுத்தவும் ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

‘சநாதன’ பட்ஜெட்: 2025-26-ஆம் நிதியாண்டுக்கான மாநில பட்ஜெட், இந்தியாவின் சநாதன கலாசாரத்துக்காக அா்ப்பணிக்கப்பட்டுள்ளதாக முதல்வா் யோகி ஆதித்யநாத் பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

‘விளிம்புநிலை மக்களுக்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமா் நரேந்திர மோடியின் பாா்வையுடன், இந்த பட்ஜெட் இளைஞா்கள், பெண்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது. வா்த்தகம், சுற்றுலா, தொழில்நுட்பம், பாரம்பரியம், திறமை ஆகியவற்றுடன் உத்தர பிரதேசத்தை மாநில பாஜக அரசு முன்னோக்கி கொண்டு செல்கிறது’ என்றும் அவா் கூறினாா்.

Read Entire Article