ARTICLE AD BOX
ஈராக் நாடாளுமன்றத்தில் பெண் குழந்தைகளின் திருமண வயதை 9 ஆக குறைத்து குழந்தை திருமணச் சட்டத்தை செவ்வாய்க்கிழமை நிறைவேற்றியுள்ளனர்.
மேலும், திருமணம், விவாகரத்து உள்ளிட்ட குடும்ப விவகாரங்கள் குறித்து முடிவெடுத்துக் கொள்ள மதத் தலைவர்களுக்கு அதிகாரம் அளித்து சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்துள்ளனர்.
ஈராக்கில் குழந்தை என்பது நீண்டகாலப் பிரச்னையாக உள்ளது. அந்நாட்டில் உள்ள 28 சதவிகித பெண்களுக்கு 18 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைக்கப்பட்டதாக ஐ.நா. கணக்கெடுப்பில் தெரியவந்தது.
இந்நிலையில், குழந்தை திருமணங்களை தடுக்க சட்டங்களை கடுமையாக்கி, ஏழை பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், திருமண வயதை குறைத்து ஈராக் அரசு சட்டத்தை இயற்றியுள்ளது.
ஈராக்கில் பெரும்பான்மையாக உள்ள ஷியா முஸ்லிம் பெண்களின் திருமண வயது 9 ஆகவும், சுன்னி முஸ்லிம் பெண்களின் திருமண வயது 15 ஆகவும் குறைத்து சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
நீதியை மேம்படுத்துவதற்கும், மக்களின் அன்றாட வாழ்க்கையை ஒழுங்குப்படுத்துவதற்கும் மேற்கொள்ளப்பட்ட முக்கியமான நடவடிக்கைதான் இந்த சட்டம் என்று ஈராக் நாடாளுமன்றத் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : மன்மோகன் சிங், ரத்தன் டாடாவுக்கு பாரத ரத்னா?
பல நாடுகளில் பெண்களின் திருமண வயதான 18-ஐ அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈராக்கில் குழந்தை திருமண சட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், வறுமையில் இருந்து தப்பிப்பதற்காக தங்களின் குழந்தைகளை பெற்றோர்களே திருமணம் செய்து வைக்கும் சூழல் அதிகரிக்கும் என்றும், இவ்வாறான பல திருமணங்கள் தோல்வியில் முடிவதால் இளம் பெண்கள் வாழ்நாள் முழுவதும் விளைவுகளை சந்தித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த சட்டத்துக்கு ஈராக் நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.