ARTICLE AD BOX
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் அதிகமுறை பிளேஆஃப் சென்ற அணிகள் பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் (12) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (10) அணிகளுக்கு பிறகு 9 முறை தகுதிபெற்ற ஆர்சிபி அணி 2009, 2011 மற்றும் 2016 என மூன்று ஐபிஎல் இறுதிப்போட்டிகளில் விளையாடியுள்ளது.
ஆனால் 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராகவும், 2011 ஐபிஎல் இறுதிப்போட்டியில் சிஎஸ்கே அணிக்கு எதிராகவும், 2016 ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியிலும் தோல்விற்று இன்றுவரை கோப்பை வெல்லாத அணியாக இருந்துவருகிறது.
ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான மூன்றாவது அணியாக திகழ்ந்தாலும் ஒரு கோப்பை கூட வெல்லாமல் இருந்துவரும் ஆர்சிபி அணி, 2025 ஐபிஎல் தொடரில் மூத்தவீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என ஒரு சிறந்த கலவையை கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆர்சிபி அணி கோப்பை வெல்லவேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் விராட் கோலி மற்றும் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
விராட் கோலி அனுப்பிய மெசேஜ்..
ஐபிஎல் கோப்பை வெல்வது குறித்து பேசியிருக்கும் ஏபிடி வில்லியர்ஸ், “ஐபிஎல்லை வெல்வது நம்பமுடியாத அளவிற்கு கடினமான விசயம். உலகக் கோப்பையை கூட வெல்லும் அளவிலான 10 உலகத் தரம் வாய்ந்த அணிகள் ஐபிஎல்லில் விளையாடுகின்றன. இதில் உங்களுடைய பயணம், அணியின் உத்திகள், காயங்கள் மற்றும் சீசன் முழுவதும் வெவ்வேறு நிலைமைகள் என பல காரணிகள் வெற்றி மற்றும் தோல்வியை தீர்மானிக்கின்றன.
தொடரின் இறுதிவரை ஆற்றலையும், உத்வேகத்தையும் சரியாக நிர்வகிக்கும் அணியே சிறப்பாக செயல்படும். தங்கள் ஹொம் கிரவுண்டில் கிடைக்கும் நன்மையைப் பயன்படுத்திக் கொள்ளும் அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெறும்" என்று ஏபி டிவில்லியர்ஸ் ஜியோ ஹாட்ஸ்டாரில் கூறினார்.
ஈ சாலா நம்தே என கூறியதற்கு விராட் கோலி அனுப்பிய மெசேஜ் குறித்து பேசிய அவர், “நான் 'ஈ சாலா கப் நம்தே' என்று சொன்னேன், விராட் கோலியிடம் இருந்து எனக்கு நேரடியாக மெசேஜ் வந்தது. அவர் என்னிடம், 'தயவுசெய்து, இப்போது அதைச் சொல்வதை நிறுத்துங்கள்' என்று கூறினார். நான் அதற்காக கொஞ்சம் சிக்கலில் மாட்டிக் கொண்டேன்! நியாயமாகச் சொன்னால், நானும் கூட அதைச் சொல்லி சொல்லி தற்போது சோர்வடைந்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.
மேலும் ஆர்சிபி அணி கோப்பை வெல்லவேண்டும் என்ற விருப்பத்தை சொன்ன ஏபிடி, “18வது சீசனாக ஐபிஎல் நடக்கவிருக்கிறது, தொடரில் நம்பர் 18 ஜெர்சி அணியும் வீரர் இருக்கிறார். ஆர்சிபி கோப்பையை உயர்த்தினால், விராட்டுடன் சேர்ந்து நானும் கொண்டாடுவேன்!” என தன் விருப்பத்தை கூறியுள்ளார்.