கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், கிளவுட் சைபர் பாதுகாப்புத் துறையில் வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனமான WIZ-ஐ வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கியுள்ளதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் தகவலை வெளியிட்டுள்ளது.
சுந்தர் பிச்சை ஏஐ சேவைத் துறையில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தினாலும் பிற துறை வளர்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். இதேவேளையில் ஏஐ சேவைக்கு முதுகெலும்பாக கிளவுட் சேவை இருப்பதால் மீண்டும் இஸ்ரேல் நாட்டின் WIZ நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.

கூகுள் நிறுவனம் 2024 ஆம் ஆண்டில் கைவிட்ட பேச்சுவார்த்தையை மீண்டும் துவங்கியுள்ளது. அப்போது இரு நிறுவனங்களுக்கிடையே மதிப்பீட்டு வேறுபாடுகள் காரணமாக இந்த நிறுவன கைப்பற்றல் ஒப்பந்தம் தோல்வி அடைந்தது. அப்போது 23 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட WIZ தற்போது 30 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டு உள்ளது.
2020 ஆம் ஆண்டு இஸ்ரேலிய இராணுவ அதிகாரிகளால் நிறுவப்பட்டது தான் இந்த WIZ என்ற கிளவுட் சைபர் செக்யூரிட்டி நிறுவனம். இந்நிறுவனம் துவங்கப்பட்ட சில காலத்திலேயே சைபர் பாதுகாப்புத் துறையில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்து முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதன் மூலம் Andreessen Horowitz, சிக்கோயா, இன்டெக்ஸ் வென்ச்சர்ஸ் மற்றும் இன்சைட் பார்ட்னர்ஸ் போன்ற முன்னணி முதலீட்டு நிறுவனங்கள் WIZ நிறுவனத்தில் முதலீடு செய்து பெரும் ஆதரவை அளித்துள்ளது.

இந்த நிறுவன கையகப்படுத்தல் முயற்சியைக் கூகுள் கிளவுட் பிரிவின் தலைவர் தாமஸ் குரியன் முன்னெடுத்து வருகிறார். இந்த ஒரு வருட இடைவெளியில் விஸ் நிறுவனம் வலுவான நிதிநிலையைத் தனது முதலீட்டாளர்களுக்குக் காட்டியுள்ளது. 2023 ஜூலை நிலவரப்படி, அதன் வருடாந்திர வருவாய் 500 மில்லியன் டாலர்களை எட்டியுள்ளது, 2025 ஆம் ஆண்டிற்குள் இது 1 பில்லியன் டாலர்களை எட்டும் என்று கணித்துள்ளது என டெக் க்ரஞ்ச் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
விஸ் நிறுவனம் மே 2023 இல் 1 பில்லியன் டாலர் நிதி திரட்டியது, அப்போது அதன் மதிப்பு 12 பில்லியன் டாலர்களாக இருந்தது. பின்னர், அதன் மதிப்பு 16 பில்லியன் டாலர்களாக அதிகரித்தது. தற்போது 30 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.