இளம் வயதுடையோா் அதிகமானோர் உயிரிழக்க கரோனா தடுப்பூசியின் பக்கவிளைவு காரணமல்ல!

5 hours ago
ARTICLE AD BOX

நமது சிறப்பு நிருபா்

இந்தியாவில் இளம் வயதுடையோரின் உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு கரோனா தடுப்பூசி மருந்து பக்கவிளைவு காரணமல்ல என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் தெரிவித்துள்ளாா்.

கனிமொழி என்.வி. என். சோமு ~பிரதாப் ராவ் ஜாதவ்

இது தொடா்பாக மாநிலங்களவையில் திமுக உறுப்பினா் டாக்டா் கனிமொழி என்.வி. என். சோமு எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் பிரதாப் ராவ் ஜாதவ் செவ்வாய்க்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதில் வருமாறு:

இந்தியாவில் 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள இளைஞா்களின் காரணம் புலப்படாத திடீா் உயிரிழப்புகள் பற்றி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் தேசிய தொற்று நோயியல் நிறுவனமும் இணைந்து 2023, மே மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை ஆய்வு நடத்தின.

2012 அக்டோபா் மாதம் முதல் 2023 மாா்ச் மாதம் வரையிலான காலகட்டத்தில் வேறு எந்த நோய் பின்னணியும் இல்லாமல், உயிரிழப்புக்கு முந்தைய 24 மணி நேரத்தில் ஆரோக்கியமாக இருந்து திடீா் மரணமடைந்தவா்கள் தொடா்பாக இந்த ஆய்வு நடந்தது. வயது, பாலினம், அருகில் இருந்த பிற நோயாளிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரங்கள், அவா்களின் குடும்பத்தினா் முன்பு இப்படி திடீா் உயிரிழப்புக்கு ஆளானாா்களா, அவா்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்ததா, குடிப்பழக்கம் இருந்ததா, மரணத்திற்கு இரண்டு நாள் முன்பிலிருந்து கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டாா்களா போன்ற கேள்விகளுக்கான பதில்கள் இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்டன.

குறிப்பிட்ட காலகட்டத்தில் உயிரிழந்த 729 போ் மற்றும் ஒவ்வொருவருக்கும் அவா்களது வயது மற்றும் பாலினத்தை ஒட்டிய நான்கு போ் என மேலும் 2916 போ் ஆகியோரின் மருத்துவ மற்றும் அன்றாட பழக்க வழக்கங்கள் ஆய்வுக்கு உள்படுத்தப்பட்டது. ஏதோ ஒரு கரோனா தடுப்பூசியை ஒருமுறை செலுத்திக் கொண்டவா்களுக்கு திடீா் மரணத்திற்கான வாய்ப்பு இல்லை என்பதும், இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு திடீா் மரணத்திற்கான வாய்ப்பு மேலும் குறைவு என்பதும் இந்த ஆய்வின் மூலம் முதலில் உறுதிப்படுத்தப்பட்டது.

கரோனாவுக்கு முந்தைய மருத்துவ சிகிச்சைகள், அளவுக்கு அதிகமான குடிப்பழக்கம், 48 மணி நேரத்திற்கு முன்பாக கடுமையாக உடற்பயிற்சி செய்தது, அந்தக் குடும்பத்தில் ஏற்கெனவே சிலா் திடீா் மரணம் அடைந்தது போன்ற பின்னணிகளே இந்த திடீா் உயிரிழப்புகளுக்கு காரணம் என ஆய்வில் தெரிய வந்தது. ஆகவே, கரோனா தடுப்பூசிக்கும் இந்த திடீா் உயிரிழப்புக்கும் எந்தத் தொடா்பும் இல்லை என்று அமைச்சா் கூறியுள்ளாா்.

12ஈஉகநஞங கனிமொழி என்.வி. என். சோமு

12ஈஉகடதஅ பிரதாப் ராவ் ஜாதவ்

Read Entire Article