ARTICLE AD BOX
சுதந்திரமாக செயல்படுவது என்பது தன்னிச்சையாக நாம் விரும்பியபடி செயல்படவோ, சிந்திக்கவோ, பேசவோ, வாழவோ இருக்கும் உரிமை அல்லது அதிகாரமாகும். இன்றைய உலகில் சுதந்திரமாக செயல்படுவது என்பது மிக சாதாரணமாக பல இடங்களில் பேசப்பட்டாலும் வெளிப்புறத் தடைகள் எதுவும் இல்லாமல் நம்மால் விரும்பியதை சுதந்திரமாக செய்ய முடியுமா என்பது கேள்விக்குறிதான்.
சுதந்திரத்திற்கு பல முகங்கள் உண்டு. குடும்பத் தலைவிகளுக்கு அவர்களது அன்றாட வேலையில் இருந்து விலக்கு கிடைக்கும் நாளை சுதந்திரமாக எண்ணுவார்கள். அலுவலகத்தில் பணிபுரியும் பெண்களோ ஒரு நாள் விடுமுறை கிடைத்தால் அப்பாடா என்று பெருமூச்சு விடுவார்கள். கைக்குழந்தைகளை வைத்திருப் பவர்களுக்கு யாரேனும் சில மணி நேரம் அந்தப் பொறுப்பை ஏற்றுக்கொண்டால் மிகவும் மகிழ்ச்சியாக எண்ணுவார்கள்.
பெரும்பாலானவர்களுக்கு சுதந்திரம் என்பது அவர்கள் விரும்பியதை செய்ய அனுமதிப்பது என்று நினைக்கிறார்கள். அது மட்டும் போதாது செய்ய விரும்புவதை அனுமதிப்பது மட்டுமல்லாமல் செய்ய விரும்பாததையும் நம் மேல் திணிக்காமல் இருப்பதும்தான் சுதந்திரம். நாம் படிக்க விரும்பியதை அனுமதிப்பது மட்டுமல்ல படிக்க விரும்பாததை நம்மேல் திணிக்காமல் இருப்பதும் சுதந்திரம்தான். நாம் விரும்பும் சூழலில் வாழ வகை செய்வது மட்டுமல்ல நம்மை விரும்பாத சூழலில் வற்புறுத்தாமலிருப்பதும் சுதந்திரம் தான்.
சுதந்திரம் என்பது இயல்பானது, இயற்கையானது. ஒவ்வொருவருக்கும் எளிதில் கிடைக்க வேண்டியது. பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், வாழ்க்கையில் முடிவு எடுக்கும் சுதந்திரம் ஆகியவை ஒருவரின் நோக்கங்களை நிறைவேற்றும் திறன் கொண்டவையாக இருக்க வேண்டும்.
சுதந்திரமாக இருப்பது என்பது உரிமைகளின் வழி வந்தது. தனிப்பட்ட சுதந்திரம், பொருளாதார சுதந்திரம், கருத்துக்களை வெளியிடுவதில் சுதந்திரம் என எங்கும் எதிலும் சுதந்திரமாக செயலாற்றக் கூடிய சிறப்பு தன்மையை அடைவதற்கு தேவையான சூழ்நிலைகளை ஏற்படுத்துவதுதான் சுதந்திரம்.
சுதந்திரமாக செயல்படுவதற்கு முதலில் சுய நம்பிக்கையும், நம் திறமைகளில் நம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு கொண்டு அவற்றை வளர்த்துக் கொள்வது அவசியம். அதேபோல் நம்மிடம் இருக்கும் பலவீனங்களை ஏற்றுக்கொண்டு, முடிந்தால் அவற்றைக் களைய முற்படவும். இல்லையெனில் அதிலிருந்து கற்றுக்கொள்ளவும், நம் மீது நம்பிக்கை வைத்து இலக்குகளை அடைய முயற்சியும் செய்ய வேண்டும்.
நேரத்தை திறம்பட நிர்வகிக்க தெரிந்துகொள்ள வேண்டும். முக்கியமான பணிகளுக்கு முன்னுரிமை அளித்து நாம் செய்ய வேண்டிய வேலைகளை ஒழுங்கமைத்து குறித்த நேரத்தில் பணிகளை முடிக்குமாறு பழகுவதும் அவசியம். முடிவுகளை எடுப்பதிலும், சவால்களை எதிர்க்கொள்ள தயங்காமல் செயல்படுவதிலும், தோல்விகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு நம் இலக்கை நோக்கி சுதந்திரமாக செயல்பட வேண்டும்.