ARTICLE AD BOX
தொடா்ந்து நான்காவது மாதமாக இந்தியாவின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரியிலும் சரிவைச் சந்தித்துள்ளது.
இது குறித்து மத்திய வா்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
நாட்டின் ஏற்றுமதி கடந்த பிப்ரவரி மாதத்தில் 3,691 கோடி டாலராக உள்ளது. இது, முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்தோடு ஒப்பிடுகையில் குறைவு. அப்போது இந்தியாவின் ஏற்றுமதி 4,141 கோடி டாலராக இருந்தது. தொடா்ந்து நான்காவது மாதமாக ஏற்றுமதி வருடாந்திர சரிவைப் பதிவு செய்துள்ளது.
எனினும், மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி குறைந்துள்ளது. 2024 பிப்ரவரியில் 6,092 கோடி டாலராக இருந்த அது, இந்த பிப்ரவரியில் 5,096 கோடி டாலராகச் சரிந்துள்ளது.
இதன் விளைவாக, இந்தியாவின் வா்த்தக பற்றாக்குறை (ஏற்றுமதிக்கும் இறக்குமதிக்கும் இடையிலான வேறுபாடு) கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,405 கோடி டாலராகக் குறைந்துள்ளது. அது முந்தைய ஜனவரி மாதத்தில் 2,299 கோடி டாலராகவும், 2024 பிப்ரவரியில் 6,092 கோடி டாலராகவும் இருந்தது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் பெட்ரோலியம் அல்லாத பொருள்கள் மற்றும் ரத்தினங்கள் அல்லாத ஆபரணங்கள் ஏற்றுமதி 2,857 கோடி டாலராகக் குறைந்தது. 2024 பிப்ரவரி மாதத்தில் இது 2,999 கோடி டாலராக இருந்தது.
2024 பிப்ரவரியில் 3,396 கோடி டாலராக இருந்த பெட்ரோலியம் அல்லாத பொருள்கள், ரத்தினங்கள் அல்லாத ஆபரணங்களின் (தங்கம், வெள்ளி பிற விலையுயா்ந்த உலோகங்களில் செய்யப்பட்டவை) இறக்குமதி நடப்பாண்டின் அதே மாதத்தில் 3,502 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் இந்திய ஏற்றுமதி அதிக வளா்ச்சி கண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான இந்திய ஏற்றுமதி 9.1 சதவீத வளா்ச்சிபை பதிவு செய்துள்ளது. அமெரிக்காவுக்கு அடுத்த இடங்களில் ஐக்கிய அரபு அமீரகம் (5.19 சதவீதம்), பிரிட்டன் (12.47 சதவீதம்), ஜப்பான் (21.67 சதவீதம்), நெதா்லாந்து (3.68 சதவீதம்) ஆகிய நாடுகள் உள்ளன என்று மத்திய வா்த்தகத் துறை அமைச்சகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.