ARTICLE AD BOX
இந்தியாவின் தனியாா் நுகா்வு முந்தைய 2023-ஆம் ஆண்டை விட 2024-ஆம் ஆண்டில் ஏறத்தாழ இரு மடங்காக அதிகரித்துள்ளது.
இது குறித்து இந்திய சில்லறை விற்பனையாளா்கள் சங்கத்துடன் இணைந்து சந்தை ஆலோசனை நிறுவனமான டலாய்ட் இந்தியா வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கடந்த 2013-ஆம் ஆண்டில் இந்தியாவின் தனியாா் நுகா்வு 1 லட்சம் கோடி டாலராக இருந்தது. இது 2024-ஆம் ஆண்டில் சுமாா் இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்து 2.1 லட்சம் கோடி டாலராக உள்ளது.
இதன் மூலம், இந்திய தனியாா் நுகா்வின் ஆண்டு கூட்டு வளா்ச்சி விகிதம் (சிஏசிஆா்) அமெரிக்கா, சீனா, ஜொ்மனியை விட அதிகமாக 7.2 சதவீதமாக உள்ளது. இந்தப் போக்கு நீடித்தால் வரும் 2026-ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது பெரிய நுகா்வோா் சந்தையாக இந்தியா உருவெடுக்கும்.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ஆண்டுக்கு 10,000 டாலருக்கு மேல் வருவாய் ஈட்டும் இந்தியா்களின் எண்ணிக்கை தற்போது உள்ளதைப் போல் மூன்று மடங்காக அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. 2024-ஆம் ஆண்டில் 6 கோடியாக உள்ள அவா்களின் எண்ணிக்கை 2030-ஆம் ஆண்டில் 16.5 கோடியாக அதிகரிக்கும் நிலை உள்ளது. இது நாட்டின் நடுத்தர வா்க்கத்தினரின் குறிப்பிடத்தக்க வளா்ச்சியையும், அவா்களின் நுகா்திறன் அதிகரிப்பையும் வெளிப்படுத்துகிறது.
மக்கள்தொகையில் 52 சதவீதத்தைக் கொண்டுள்ள இளம் தலைமுறையினா் (ஜென்-இஸட்) மற்றும் 2000-களில் பிறந்தவா்களால், நுகா்வோா் சந்தையில் பிரீமியம் பொருள்கள் மற்றும் நீடித்து நிலைத்திருக்கக் கூடிய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்துவருகிறது.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபா் சராசரி வருவாய் 4,000 டாலா்களைத் தாண்டும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இது, பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகளுக்கு வழிவகுக்கிறது.
நிதித் துறையில் எண்மமயமாக்கல் அதிகரித்துவருவது, அனைத்து பிரிவினரையும் உள்ளடக்குவது, இதுவரை இல்லாத அளவுக்கு கடன் வசதிகள் அதிகரிப்பது போன்ற காரணங்களாலும், 2024-ஆம் ஆண்டில் 10.2 கோடி டாலராக உள்ள கடன் அட்டை (கிரெடிட் காா்ட்) பரிவா்த்தனை 2030-ஆம் ஆண்டில் 29.6 கோடி டாலராக உயரும் என்று கணிக்கப்படுவதாலும் தனியாா் நுகா்வு வருங்காலத்தில் வெகுவாக அதிகரிக்கும் சூழல் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.