ARTICLE AD BOX

image courtesy; @BCCI
துபாய்,
8 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடித்த அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன.
லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் இருந்து இந்தியா , நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் இருந்து தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவும் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில் நாளை நடைபெற உள்ள முதல் அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் துபாயில் மோதுகின்றன. நாளை மறுநாள் நடைபெறும் 2-வது அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா - நியூசிலாந்து லாகூரில் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்நிலையில், நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் அழுத்தம் இருக்கும் என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, ஆஸ்திரேலியா மிகவும் வலிமையான எதிரணி. நாங்கள் செய்யவேண்டியது எல்லாம் ஒன்றே ஒன்றுதான். கடைசி 3 போட்டிகளில் எப்படி விளையாடினோமோ அதேபோல நாளை நடைபெறும் போட்டியிலும் விளையாட வேண்டும்.
ஆஸ்திரேலிய அணியினர் எப்படி விளையாடுவார்கள் என்பது எங்களுக்கு தெரியும். ஆட்டத்தின் நடுவே சில பதற்றமான சூழல்களும் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இன்றைய காலக்கட்டத்தில் போட்டிகள் அவ்வாறுதான் இருக்கின்றன. நாளை நடைபெறும் ஆட்டத்தில் இரு அணிகள் மீதும் அழுத்தம் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.�