ARTICLE AD BOX
* கொல்கத்தா கேப்டன் ரகானே
இம்மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் புதிய கேப்டனாக அஜிங்கிய ரகானே நியமிக்கப்பட்டுள்ளார். கூடவே துணை கேப்டனாக வெங்கடேஷ் அய்யர் பொறுப்பேற்க உள்ளார். இந்த தகவல்களை நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியின் தலைமை செயல் அலுவலர் வெங்கி மைசூர் நேற்று தெரிவித்தார்.
* பிரேசில் இந்தியா மோதல்
உலக கோப்பை வென்ற பிரேசில் அணியில் இடம் பெற்ற முன்னாள் வீரர்கள் அணியும், இந்திய அணியும் மோதும் கால்பந்து போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. பிரேசில் லெஜண்ட்ஸ் அணியில் ரொனால்டினோ, கஃபு, ரிவால்டோ, துங்கா போன்ற பெரும் நட்சத்திரங்கள் களம் காண உள்ளனர். ஆல் ஸ்டார் இந்திய அணி பிரசந்தா பானர்ஜி தலைமையில் விளையாடும். நேரு அரங்கில் மார்ச் 30ம் தேதி நடைபெறும் இந்தப்போட்டிக்கான டிக்கெட்களை ‘BookMyShow’ என்ற இணையதளம் மூலமாக வாங்கலாம்.
* புதிய நிர்வாகிகள் தேர்வு
சிறு படகோட்டுதல் சங்கமான தமிழ்நாடு கனோயின்(ஒற்றையர்), கயாகிங்(இரட்டையர்) சங்கத்தின் பொதுக் குழு கூட்டம் சென்னையில் ேநற்று நடைபெற்றது. அதில் புதிய நிர்வாகிகள் தேர்வும் நடைபெற்றது. அப்போது சங்கத்தின் தலைவராக முன்னாள் ஐஏஎஸ் அலுவலர் எஸ்.ரகுநாதன், செயலாளராக ஆர்.மெய்யப்பன், பொருளாராக ஆர்.சுப்ரமணியன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூடவே துணைத் தலைவர்களாக சுமதி, சுனில் ராலன், டாக்டர் ஆறுமுகம் ஆகியோரும், செயற்குழு உறுப்பினர்களாக ஜி.பெருமாள், சோமசுந்தரம், அர்ஜூன் அந்தோணி, தமிழ்வேந்தன், சதீஷ்குமார், டாக்டர் வசந்தகுமாரி ஆகியாரும் ஒரு மனதாக தேர்வாகினர். தொழில்நுட்ப ஆலோசகராக எம்.வினோத் பொறுப்பேற்றார்.
* கேன்ஸ் சாம்பியன் இனியன்
பிரான்சின் கேன்ஸ் நகரில் 38வது கேன்ஸ் ஓபன் சர்வதேச செஸ் போட்டி நடந்தது. இதில் 25 நாடுகளைச் சேர்ந்த 147 செஸ் ஆட்டக்காரர்கள் பங்கேற்றனர். மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த ஆட்டத்தில் 6வெற்றி, 3 டிரா என 7.5புள்ளிகளுடன் இந்திய வீரர் கிராண்ட் மாஸ்டர் இனியன் பன்னீர்செல்வம் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார். மற்றொரு இந்திய வீரர் சர்வதேச மாஸ்டர் ஆராத்யா கார்ட் 2வது இடத்தையும், நடப்பு சாம்பியனாக களம் கண்ட கஜகஸ்தான் வீரர் கிராண்ட் மாஸ்டர் கஸ்ய்பேக் 3வது இடத்தையும் பிடித்தனர்.
* சர்வதேச டேபிள் டென்னிஸ்
டபிள்யூடிடி ஸ்டார் சர்வதேச டேபிள் டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற உள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மார்ச் 25முதல் மார்ச் 30ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்தியாவின் சரத் கமல், சத்யன் ஞானசேகரன் உட்பட உலகின் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் இப்போட்டியில் விளையாட உள்ளனர்.
* எம்மா சாம்பியன்
மெக்சிகோவில் மெரிடா ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. அதன் பெண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் அகாபுல்கோ நகரில் நேற்று நடந்தது. இதில், அமெரிக்காவின் எம்மா நவரோ(23வயது, 8வது ரேங்க்), கொலம்பியாவின் எமிலினா அரங்கோ(24வயது, 80வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் எம்மா வெறும் 55நிமிடங்களில் 6-0, 6-0 என்ற நேர் செட்டில் வென்று, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் டபிள்யூடிஏ பெண்கள் உலக டென்னிஸ் தரவரிசையில் 2வது முறையாக எம்மா 8வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
The post சில்லி பாய்ன்ட்… appeared first on Dinakaran.