மத்திய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வேலூர் இளைஞரிடம் ரூ.17 லட்சம் அபேஸ் செய்துகொண்டு தலைமறைவான பாஜக பிரமுகரை போலீசார் தேடி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் லோகேஷ். இவருக்கு வயது 32. முதுகலை பட்டதாரியான இவர் விளையாட்டில் ஆர்வம் கொண்டவர். இதனால் மாநில, மத்திய அரசின் விளையாட்டுத்துறையின் ஒதுக்கீட்டில் அரசு வேலை வாங்க வேண்டும் என விரும்பியுள்ளார்.

இதனால் கடந்த 2022ஆம் ஆண்டு ஆன்லைன் மூலம் யங் ஸ்போர்ட்ஸ் ஆப் இந்தியா என்ற நிறுவனத்தை தொடர்பு கொண்டார். அப்போது அந்த நிறுவனத்தின் உரிமையாளர் அலுவலக முகவரியை கொடுத்து அங்கு நேரில் வந்து விவரங்களை தெரிந்து கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து லோகேஷ் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயராம் சொன்ன சென்னை பம்மலை அடுத்த பொழிச்சநல்லூர் பாலாஜி நகரில் இருக்கும் அலுவலகத்துக்கு சென்றுள்ளார்.

அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் ஒருவர் விவரங்களை கூறியுள்ளார். பின்னர் லோகேஷ் அந்த நிறுவனத்தில் இணைந்து சிலம்பம் கற்றதோடு அதற்கான சான்றிதழையும் வாங்கியுள்ளார்.

அப்போதுதான் ஜெயராமுடன் லோகேஷுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது பாஜக பிரமுகரான ஜெயராம் தனக்கு நிறைய மத்திய அமைச்சர்களை தெரியும் எனவும் அவர்களிடம் சொல்லி விளையாட்டுத்துறையில் அரசு வேலை வாங்க முடியும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பிய லோகேஷ், தனக்கும் வேலை வாங்கி தருமாறு ஜெயராமிடம் கேட்டுள்ளார். அதோடு தனது சான்றிதழ்களையும் அவரிடம் கொடுத்துள்ளார்.

இதையடுத்து மத்திய அரசு வேலை வாங்க ரூ.17 லட்சம் செல்வாகும் என ஜெயராம் கூறியிருக்கிறார். இதனால் வங்கி பரிவர்த்தனை மூலம் ரூ. 16 லட்சமும் யுபிஐ மூலம் ஒரு லட்சமும் லோகேஷ் ஜெயராமிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

ஆனாலும் ஜெயராம் வேலை வாங்கி தராமல் இழுத்தடித்ததாக தெரிகிறது. இதுமட்டுமில்லாமல், மேலும் இரண்டு பேரிடமும் ஜெயராம் இதே வேலையில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த லோகேஷ் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து கடந்த மாதம் தாம்பரம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இந்த புகார் சங்கர் நகர் காவல்நிலையத்திற்கு மாற்றப்பட்டு வழக்குபதிவு செய்து விசாரணை நடைபெற்றது. சங்கர் நகர் போலீசார் ஜெயராம் மீதும் அவரது மனைவி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் இருவரும் தலைமறைவானது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.