ARTICLE AD BOX
சென்னை: பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி: “நாளை பிளஸ் 2 தேர்வு எழுதும் அனைத்து மாணவ, மாணவியர்க்கும் எனது சிறப்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்! இன்று இரவு நன்றாக உறங்குங்கள். உங்கள் தேர்வுகளை அமைதியாகவும் நம்பிக்கையுடனும் அணுகுங்கள். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் மாணவ, மாணவியர்களுக்கான உங்களுடைய உணர்வுபூர்வ ஆதரவு முக்கியமானது. தயவு செய்து வீட்டுச் சூழலை மன அழுத்தமில்லாமல் வைத்திருங்கள். உங்கள் பிள்ளைகள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி: பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவச் செல்வங்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். நீங்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் தேர்வு எழுதுங்கள். இத்தனை ஆண்டுகளாக எழுதிய தேர்வுகளைப் போலவே இதுவும் ஒரு தேர்வுதான் என்ற மனைநிலையோடு தேர்வறைக்குள் நுழையுங்கள். வளமான எதிர்காலம் உங்களுக்காக காத்துக் கொண்டு இருக்கிறது. அன்பு மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்: தேர்வு நேரத்திலும், தேர்தல் முடிவுகள் வெளியாகும் போதும் மாணவ, மாணவிகள் உள்ள உறுதியினையும், எதிர் காலத்தில் சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையையும் வினாடியும் தளரவிடாமல் தேர்வு மையம் சென்று, தேர்வு எழுத வேண்டும். முடிவையும் எதிர் கொள்ள வேண்டும். மேலும் தேர்வுக்கு செல்லும் மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று தொடங்கும் 12ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளை எழுதும் 8.21 லட்சம் மாணவ, மாணவியருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சுமார் 3500 மையங்களில் நடைபெற உள்ள இந்தத் தேர்வை மாணவர்கள் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். எந்தவித கவனச் சிதறலுக்கும் ஆட்படாமல் நேர்மையுடனும் துணிவுடனும் தேர்வை எழுதுங்கள். உங்கள் எதிர்காலம் வளமாகவும் நலமாகவும் அமைய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
பாமக தலைவர் அன்புமணி: மாணவர்களின் வாழ்க்கையில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் மிகவும் முக்கியமானவை ஆகும். மாணவர்களின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பதை இந்தத் தேர்வுகள் தான் தீர்மானிக்கின்றன. இதைக் கருத்தில் கொண்டு மாணவச் செல்வங்கள் எந்த பதட்டமும், பரபரப்பும் இல்லாமல் கவனமாக படித்து 12ம் வகுப்புத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
The post இன்று பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.