ARTICLE AD BOX
சினிமா ரசிகர்களுக்காகவே வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் புதுப்புதுப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வருகின்றன. வருடந்தோறும் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்க முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைக்கும். ஆனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் கடந்த மூன்று வாரங்களில் 14 படங்கள் வெளிவந்துள்ளன.
பெரிய பட்ஜெட் அல்லது சிறிய பட்ஜெட் எந்த படமாக இருந்தாலும் சரி, எத்தனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் மக்களின் மனதை கொள்ளை அடிக்கும் படங்கள் மட்டுமே வசூலில் சாதனை படைத்து வந்துள்ளன. அந்த வகையில் பொங்கலுக்கு வெளியான படங்களில் வணங்கான், மதகஜராஜா, காதலிக்க நேரமில்லை படங்கள் வசூலை குவித்து வரும் நிலையில் மற்ற படங்கள் ஓரளவே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளன.
இந்நிலையில், இன்று பெரிய நடிகர்களின் படங்கள் ஏதும் வெளிவராத நிலையில் சிறிய பட்ஜெட் படங்களே வெளியாக உள்ளன. இந்த வகையில் இன்று ரிலீஸ் ஆகும் படங்களில் எந்த படம் வெற்றி பெற்று வசூலை குவித்து, ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம். இன்று 6 புதிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த படங்களில் யார், யார் நடித்துள்ளனர் என்று அறிந்து கொள்ளலாம்.
1. 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்'
குழந்தைகள் உலகத்தை மையமாக வைத்து, அதில் காமெடியையும் சேர்த்து எடுக்கப்பட்டுள்ள 'குழந்தைகள் முன்னேற்றக் கழகம்' படத்தில் யோகி பாபு மற்றும் செந்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சுப்பு பஞ்சு, லிஸி ஆண்டனி, கோவிந்த மூர்த்தி, சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
2. பாட்டல் ராதா
இயக்குனர் பா ரஞ்சித் தயாரிப்பில் உருவாகி உள்ள 'பாட்டல் ராதா' படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குடிபோதையால் குடும்பங்கள் எப்படியெல்லாம் சீரழிக்கிறது என்பதை பொழுதுபோக்கு அம்சத்துடன் சொல்லியுள்ள இந்த படம் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்று பார்க்கலாம்.
3. வல்லான்
சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி யின் மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகி மிகப்பெரிய அளவில் வசூலை குவித்து வரும் நிலையில், சுந்தர் சி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வல்லான்' திரைப்படம் இன்று வெளியாக உள்ளது. சுந்தர் சி உடன் தன்யா ஹோப், சாந்தினி தமிழரசன், அபிராமி வெங்கடாசலம் உள்பட பலர் நடித்துள்ளனர்.
4. குடும்பஸ்தன்
'குடும்பஸ்தன்' படத்தில் தினமும் குடும்பத்தை நடத்த கஷ்டப்படும் ஒரு மிடில் கிளாஸ் இளைஞனாக மணிகண்டன் நடித்துள்ளார். இந்தப்படம் குடும்பப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள காமெடி கதையாகும். இந்த படத்தில் சான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
5. மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்
பிரண்ட்ஸ், கூகுள் குட்டப்பா போன்ற படங்களில் நாயகியாக நடித்த, பிக் பாஸ் புகழ் லாஸ்லியா கதாநாயகியாகவும், அவருக்கு ஜோடியாக யூடியூப் சேனல் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிய ஹரி பாஸ்கர் நாயகனாக நடித்துள்ள 'மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்' படத்தை பிரபலமான தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
6. பூர்வீகம்
படிப்பு, தொழிலுக்காக பூர்வீக ஊரை விட்டுவிட்டு நகரத்திற்கு வரும் இளைஞர்களை, தங்கள் கலாச்சாரங்களை, உறவுகளின் மேன்மையை மறந்து போகும் போது, வாழ்க்கையில் எப்படிப்பட்ட பாதிப்புகள் ஏற்படுத்தும் என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கும் படம் தான் 'பூர்வீகம்'. இந்த படத்தில் கதிர், மியாஸ்ரீ, போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி, ஷாஸ்னா ஆகியோர் நடத்துள்ளனர். G.கிருஷ்ணன் இயக்கத்தில், டாக்டர் R முருகானந்த் இந்த படத்தை தயாரித்துள்ளார்.