ARTICLE AD BOX
அரக்கோணத்தில் நடைபெறவுள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை தின விழாவில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகிறார்.
மத்திய தொழில் பாதுகாப்பு படை உருவாக்கப்பட்டு 56 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு, ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலத்தில் செயல்பட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையின் மண்டல பயிற்சி மையத்தில் சி.ஐ.எஸ்.எஃப் விழா நாளை (மார்ச் 7) கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்றைய தினம் தமிழகத்திற்கு வருகை தருகிறார். அந்த வகையில் இன்று மாலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலமாக அவர் புறப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து இரவு 9:05 மணிக்கு அரக்கோணம் ஐ.என்.எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்திற்கு அமித்ஷா வருகிறார். அங்கிருந்து சாலை வழியாக தக்கோலம் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையத்திற்கு சென்று, இரவு அங்கேயே ஓய்வு எடுக்கிறார்.
இதன் தொடர்ச்சியாக நாளை காலை 8 மணிக்கு சி.ஐ.எஸ்.எஃப் விழாவில் அவர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். இதன் பின்னர் காலை சுமார் 10:30 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு பெங்களூரு செல்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் வருகையை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்களும் ட்ரோன்கள் பறக்க விட தடை விதித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விவேகானந்த சுக்லா உத்தரவிட்டுள்ளார்.