ARTICLE AD BOX
இந்தியாவில் வேகமெடுக்கும் ஏஐ துறை.. பல லட்சம் சம்பளத்தில் வேலைவாய்ப்பு..
பெங்களூரு: இந்தியாவில் தற்போது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் சார்ந்த பிரிவுகளில் வேலை வாய்ப்புகள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமில்லாமல் அதிக சம்பளத்தில் வேலை வாய்ப்பு கிடைப்பதும் தெரிய வந்துள்ளது.
சர்வதேச அளவில் ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சாட் ஜிபிடி, ஜெமினி, மெடா ஏஐ என அமெரிக்காவை சேர்ந்த பல்வேறு டெக் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு ஏஐ தொழில்நுட்பத்தில் புதுப்புது செயலிகளை அறிமுகம் செய்து வருகின்றன. பல்வேறு தொழில்களிலும் ஏஐ ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் தான் அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கு போட்டியாக சீனா டீப்சீக் செயலியை அறிமுகம் செய்தது. இந்த ஏஐ போட்டியில் இந்தியா பின்தங்கி இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் இந்தியாவை சேர்ந்த செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள் தற்போது ஏஐ நிபுணர்களுக்கு பல லட்சங்களை ஊதியமாகக் கொடுத்து வேலைக்கு எடுப்பது தெரியவந்துள்ளது.
Krutrim, Sarvam ai, turboml, smallest.ai உள்ளிட்ட இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த லாங்குவேஜ் மாடல்களை உருவாக்கி வரும் இந்த நிறுவனங்கள் தற்போது தீவிரமாக ஆட்களை வேலைக்கு தேர்வு செய்து வருகின்றன. இதில் டர்போ எம்எல் நிறுவனம் ஏஐ நிபுணர்களுக்கு ஆண்டுக்கு 80 லட்சம் ஊதியத்தில் வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதேபோல ஸ்மாலஸ்ட் ஏஐ நிறுவனம் ஃபிரஷர்களுக்கு 40 லட்சம் ரூபாய் சம்பளத்தில் வேலை வழங்குவதாக தெரிவித்திருக்கிறது. குறிப்பாக ஸ்மாலஸ்ட் ஏஐ நிறுவனம் தங்கள் நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பம் செய்பவர்களிடம் இருந்து ரெஸ்யூம் மற்றும் டிகிரி ஆகியவற்றை எதிர்பார்க்கவில்லை என தெரிவித்துள்ளது. ஃபிரஷர்களுக்கே இவ்வளவு சம்பளத்தில் வேலை வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
இந்தியாவில் தற்போது செயற்கை நுண்ணறிவு துறை சார்ந்த நிறுவனங்கள் வேகமாக செயல்பட்டு வரக்கூடிய நிலையில் இது போன்ற நிறுவனங்கள் பட்டப்படிப்பு , பணி அனுபவம் உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முழுக்க முழுக்க திறமையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு தற்போது ஆட்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இவை பல லட்சம் ரூபாய் சம்பளத்தை வாரி வழங்கவும் தயாராக இருக்கின்றன.
இந்தியாவில் அடுத்த சில மாதங்களில் செயற்கை நுண்ணறிவு துறையில் வேலை வாய்ப்பு பல மடங்கு அதிகரிக்கும் என சொல்லப்படுகிறது. குறிப்பாக இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரக்கூடிய துறையாக செயற்கை நுண்ணறிவு துறை இருக்கும். எனவே இந்த துறை சார்ந்து திறமையை வளர்த்துக் கொள்பவர்களுக்கு எதிர்காலத்தில் சிறந்த வேலை வாய்ப்பும் நல்ல ஊதியமும் கிடைக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.