ARTICLE AD BOX
உலகின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்குகளை கொண்ட நாடுகளில் ஒன்று இந்தியா ஆகும். நாடு முழுவதும் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் இதன் ரயில் சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவில் சுமார் 7 ஆயிரம் ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.
பொதுவாக ரயில்வே ஸ்டேஷன்களுக்கு செல்ல வேண்டும் என்றால் பிளாட்பார்ம் டிக்கெட் அல்லது பயண டிக்கெட் வைத்து இருக்க வேண்டும். முறையான டிக்கட் இல்லையென்றால் டிக்கெட் பரிசோதகரிடம் சிக்கினால் அபராதம் கட்டவேண்டும். இது இந்தியாவில் உள்ள ரயில் நிலையங்களின் பொதுவான நடைமுறைதான்.
ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விசா தேவை. விசா இல்லையென்றால் இந்த ரயில் நிலையத்திற்குள் நாம் செல்லவே முடியாது.
இந்த இரயில் நிலையம் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள அட்டாரி ரயில் நிலையம் ஆகும். இந்த ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் உள்ளது. இந்த ரயில் நிலையத்தில், அட்டாரியில் இருந்து பாகிஸ்தானின் வாகா எல்லை வரை ரயில் இயக்கப்படுகிறது. அமிர்தசரஸ் - லாகூர் வழித்தடத்தில் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் அட்டாரிதான். எனவே அட்டாரி ரயில் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என்றால் விசா அவசியம்.
பாகிஸ்தான் செல்வதற்கான விசா பெற்று இருக்க வேண்டும். இந்த விசா இன்றி யாரேனும் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றால் உடனடியாக கைது செய்யப்படுவார்கள். அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 24 மணி நேரமும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வளையத்திற்குள் இந்த ரயில் நிலையம் இருக்கும். பாகிஸ்தானின் சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் இடமும் இந்த அட்டாரி ரயில் நிலையம்தான். தற்போது இந்த ரயில் இயக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்தியா ரத்து செய்த பிறகு இந்த சேவையும் பாதுகாப்பு காரணங்களுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அட்டாரி ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்து இருப்பதால் எப்போதுமே பதற்றம் நிறைந்த இடமாகும். இரு நாடுகளுக்கும் இந்த ரயில் நிலையம் வழியாக செல்லமுடியும் என்பதால் பாதுகாப்பு படையினரின் பலத்த கண்காணிப்பில் வைக்கப்பட்டு இருக்கிறது.