ARTICLE AD BOX
ஐசிசி மினி உலகக்கோப்பை என கூறப்படும் சாம்பியன்ஸ் டிரோபி ஒருநாள் தொடரானது நடப்பாண்டு பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 09-ம் தேதிவரை நடக்கவிருக்கிறது.
ஹைப்ரிட் மாடல் முறையில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடரில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து முதலிய 8 அணிகள் பலப்பரீட்சை நடத்தவிருக்கின்றன.
கராச்சியில் நடைபெற்ற முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய நிலையில், பாகிஸ்தானை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி.
இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இன்று துபாயில் பலப்பரீட்சை நடத்திவருகின்றன.
3 வாய்ப்புகளை கோட்டைவிட்ட இந்திய அணி..
பரபரப்பாக தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு, முதலிரண்டு ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் அதிர்ச்சி கொடுத்தனர்.
மூத்த வீரர் சௌமியா சர்கார் மற்றும் கேப்டன் ஷாண்டோ இருவரும் டக் அவுட்டில் வெளியேற, தான்சித் ஹசன் மட்டும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விரட்டி நம்பிக்கை கொடுத்தார். ஆனால் 9வது ஓவரை வீசிய அக்சர் பட்டேல், ஒரே ஓவரில் தான்சித் மற்றும் முஸ்ஃபிகூர் ரஹீம் இருவரையும் அடுத்தடுத்த பந்தில் வெளியேற்ற 35 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்தது வங்கதேச அணி.
8.2 மற்றும் 8.3 என இரண்டு பந்துகளில் விக்கெட்டை வீழ்த்திய அக்சர் பட்டேல் ஹாட்ரிக் வாய்ப்பை உருவாக்கினார். ஆனால் அடுத்தபந்தில் கைக்கு வந்த எளிதான கேட்ச்சை ஸ்லிப் திசையில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா கோட்டைவிட்டார். அதுவரை இந்தியாவின் பக்கம் சென்றுகொண்டிருந்த போட்டி, அதற்குபிறகு வங்கதேசத்தின் பக்கம் திரும்பியது.
ரோகித் சர்மா ஒரு சிட்டர் கேட்ச்சை கோட்டைவிட, அடுத்த ஓவரில் ஹர்திக் பாண்டியா ஒரு கைக்கு வந்த கேட்ச்சை கோட்டைவிட்டார். அவர்கள் தான் அப்படியென்றால், குல்தீப் வீசிய பந்தில் விக்கெட் கீப்பர் கேஎல் ராகுல் ஸ்டம்பிங் வாய்ப்பை தவறவிட்டார். எளிதாக வீழ்த்த வேண்டிய 3 விக்கெட் வாய்ப்புகளை தவறவிட்ட இந்திய அணி, போட்டியில் ரிதமை இழந்து விளையாடிவருகிறது.
அங்கிருந்து சிறப்பாக விளையாடிவரும் தவ்ஹித் மற்றும் ஜேக்கர் அலி இருவரும் 130 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டு விளையாடிவருகின்றனர். 40 ஓவர் முடிவில் 165/5 என வங்கதேசம் விளையாடிவருகிறது.