ARTICLE AD BOX
இந்திய மருந்துகள் மீது டிரம்ப் வரி விதிப்பது அமெரிக்க மக்களுக்கே சுமையாக மாறும் அபாயம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அர்ச்சனா சுக்லா மற்றும் நிகில் இனாம்தார்
- பதவி, பிபிசி நியூஸ்
- 5 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியா மீதான டொனால்ட் டிரம்பின் பதிலடி வரி விதிப்பு இன்னும் ஒரு மாதத்தில் அமலாகும் சாத்தியக்கூறு உள்ள நிலையில் லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த வாரம் திடீர் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார். வர்த்தக ஒப்பந்தம் குறித்து அவர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
அமெரிக்கப் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரிகளுக்குப் பதிலடியாக ஏப்ரல் 2ஆம் தேதிக்குள் இந்தியா மீது வரிகளை விதிக்கப் போவதாக டிரம்ப் பின்னர் அறிவித்தார்.
இந்தியாவின் முக்கியமான ஏற்றுமதித் தொழில்களாக இருக்கும் மருந்து பொருட்கள் ஏற்றுமதி மீதான வரி உயர்வை நிறுத்த பியூஷ் கோயல் விரும்புகிறார்.

அமெரிக்காவில் விற்கப்படும் ஜெனரிக் மருந்துகளில் கிட்டத்தட்ட பாதி இந்தியாவில் இருந்துதான் வருகிறது. பிராண்ட் பெயர் கொண்ட மருந்துகளின் மலிவான பதிப்புகளான ஜெனரிக் மருந்துகள், இந்தியா போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.
அமெரிக்காவில் மருத்துவர்களால் மக்களுக்குப் பரிந்துரைக்கப்படும் மருந்துகளில் 10இல் ஒன்பது இதுபோன்ற மருந்துகளே.
இது வாஷிங்டனுக்கு பல பில்லியன் டாலர் சுகாதாரச் செலவை மிச்சமாக்குகிறது. 2022ஆம் ஆண்டில் மட்டும் இந்திய ஜெனரிக் மருந்துகள் காரணமான சேமிப்பு 219 பில்லியன் டாலர்களை (169 பில்லியன் பவுண்டுகள்) எட்டியதாக ஆலோசனை வழங்கும் நிறுவனமான IQVIA-இன் ஆய்வு தெரிவிக்கிறது.
இந்திய மருந்துகளைச் சார்ந்திருக்கும் அமெரிக்கர்கள்
வர்த்தக ஒப்பந்தம் இல்லாதபட்சத்தில் டிரம்பின் இந்த வரி சில இந்திய ஜெனரிக் மருந்துகளை எட்ட முடியாத ஒன்றாக ஆக்கிவிடும். சில நிறுவனங்கள் சந்தையில் இருந்து வெளியேறும் நிலைக்குத் தள்ளப்படும். இதன் காரணமாகத் தற்போதுள்ள மருந்து பற்றாக்குறை அதிகரிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
"இந்த வரிவிதிப்பு, தேவை-விநியோக சமநிலையின்மையை மோசமாக்கலாம். காப்பீடு இல்லாதவர்கள் மற்றும் ஏழை மக்கள் அதிக செலவுகளைச் சந்திக்க நேரிடும்" என்று யேல் பல்கலைக்கழகத்தின் மருந்து செலவு நிபுணர் டாக்டர். மெலிசா பார்பர் கூறுகிறார்.
இது பல்வேறு உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்படும் மக்களை மேலும் பாதிக்கலாம். அமெரிக்காவில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் மனநல நோய்களுக்கான மருந்துகளில் 60%க்கும் அதிகமானவை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் என்று இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் கூட்டணி நிதியளித்த IQVIA ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
- டிரம்ப் தொனியில் மாற்றம் - ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கப் போகிறாரா?
- டிரம்பின் புதிய வரி விதிப்புகள் சீன பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கும்? ஓர் அலசல்
- உலகையே அச்சுறுத்தும் டிரம்பின் 'வரி விதிப்பு' ஆயுதம் எவ்வாறு செயல்படும்? எளிய விளக்கம்
- டிரம்ப் அறிவிப்பால் மதிப்பு உயர்ந்த 5 கிரிப்டோகரன்சிகள் யாவை? என்ன அறிவிப்பு?

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கர்கள் இந்திய அத்தியாவசிய மருந்துகளை எவ்வாறு சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு அமெரிக்காவில் பொதுவாகப் பரிந்துரைக்கப்படும் ஆன்டி-டிப்ரஸன்ட் மருந்தான செர்ட்ராலைன் ஒரு பிரதான உதாரணம்.
இதுபோன்ற பல மருந்துகள், இந்தியா அல்லாத நிறுவனங்களுடைய மருந்துகள் விற்கப்படுவதில் இருந்து பாதி விலையில் கிடைக்கின்றன.
"இதுகுறித்து நாங்கள் மிகவும் கவலைப்படுகிறோம்," என்று மருந்துகளுக்கான அணுகலுக்காகப் போராடும் குழுவான 'பப்ளிக் சிட்டிசன்ஸின்' வழக்கறிஞர் பீட்டர் மேபர்டுக் கூறுகிறார். மருந்துகளின் விலை காரணமாக நான்கு அமெரிக்க நோயாளிகளில் ஒருவர் மருந்துகளை எடுக்கத் தவறுகிறார் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சீன இறக்குமதிகள் மீதான வரிகள் காரணமாக டிரம்ப் ஏற்கெனவே அமெரிக்க மருத்துவமனைகள் மற்றும் ஜெனரிக் மருந்து தயாரிப்பாளர்களிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்கிறார் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் விற்கப்படும் மருந்துகளின் 87% மூலப்பொருட்கள் நாட்டிற்கு வெளியில் இருந்து வருகின்றன. மேலும் அவை முக்கியமாக சீனாவில் குவிந்துள்ளன. இது உலகளாவிய விநியோகத்தில் சுமார் 40 சதவீதத்தைப் பூர்த்தி செய்கிறது.
டிரம்ப் பதவியேற்றதில் இருந்து சீன இறக்குமதிகள் மீதான வரிகள் 20% அதிகரித்துள்ளதால், மருந்துகளுக்கான மூலப்பொருட்களின் விலை ஏற்கெனவே அதிகரித்துள்ளது.
- யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு புதின் முன்வைத்துள்ள நிபந்தனைகள் என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர்
- இரான், துருக்கி இடையே அதிகரித்து வரும் பதற்றம் - எர்துவானின் உண்மையான நோக்கம் என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்காவில் இந்திய மருந்துகளை உற்பத்தி செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images
வரிகளைத் தவிர்க்க நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார்.
பிராண்ட் பெயர் மற்றும் காப்புரிமை பெற்ற மருந்துகளை விற்கும் ஃபைசர், எலி லில்லி போன்ற பெரிய மருந்து நிறுவனங்கள், தங்களின் ஒரு சில உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்ற ஒப்புக்கொண்டுள்ளன.
ஆனால் குறைந்த விலை கொண்ட மருந்துகளுக்கு இது சாத்தியமில்லை.
தனது நிறுவனம் அமெரிக்காவில் ஒரு பாட்டிலுக்கு 1 டாலர் முதல் 5 டாலர் வரையிலான விலையில் மாத்திரைகளை விற்பனை செய்வதாகவும், வரிகள் காரணமாக உற்பத்தியை அமெரிக்காவுக்கு மாற்றுவது கட்டுப்படியாகாது என்றும் இந்தியாவின் மிகப்பெரிய மருந்து தயாரிப்பாளரான சன் ஃபார்மாவின் தலைவர் திலீப் ஷாங்வி கடந்த வாரம் ஒரு தொழில்துறை கூட்டத்தில் கூறினார்.
"அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்வது குறைந்தது மூன்று முதல் நான்கு மடங்கு மலிவானது" என்று ஐபிஏ-வின் சுதர்சன் ஜெயின் கூறுகிறார்.
எந்தவொரு விரைவான இடமாற்றமும் கிட்டத்தட்ட சாத்தியமற்றது. ஒரு புதிய உற்பத்தி வசதியைக் கட்டுவதற்கு 2 பில்லியன் டாலர் வரை செலவாகும். மேலும் அது செயல்படுவதற்கு ஐந்து முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும் என்று லாபி குழு PhRMA தெரிவித்துள்ளது.
- பல அமைதி ஒப்பந்தங்களில் சௌதி அரேபியாவும், கத்தாரும் மத்தியஸ்தர்களாக இருப்பது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர்
இந்திய நிறுவனங்களைப் பாதிக்கும் வரிவிதிப்பு

பட மூலாதாரம், Getty Images
இந்த வரிவிதிப்பு இந்தியாவில் உள்ள உள்ளூர் மருந்து நிறுவனங்களையும் மோசமாகப் பாதிக்கலாம். மருந்துப் பொருட்கள், இந்தியாவின் மிகப்பெரிய தொழில்துறை ஏற்றுமதியாக உள்ளதாக வர்த்தக ஆராய்ச்சி நிறுவனமான ஜி.டி.ஆர்.ஐ தெரிவிக்கிறது.
இந்தியா கிட்டத்தட்ட எந்த வரியும் செலுத்தாமல் ஆண்டுதோறும் சுமார் 12.7 பில்லியன் டாலர் மதிப்புள்ள மருந்துகளை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்கிறது. இருப்பினும் இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகள் 10.91% வரி செலுத்துகின்றன.
இது 10.9% 'வர்த்தக வித்தியாசத்தை' ஏற்படுத்துகிறது. அமெரிக்காவின் எந்தவொரு பதிலடி வரிவிதிப்பும் ஜெனரிக் மருந்துகள் மற்றும் சிறப்பு மருந்துகளுக்கான விலையை அதிகரிக்கும் என்று ஜி.டி.ஆர்.ஐ தெரிவித்துள்ளது.
அமெரிக்க சந்தையில் விலை உயர்வு ஏற்படும் அதிக வாய்ப்புள்ள துறைகளில் ஒன்றாக மருந்துகள் துறை உள்ளதாக அது சுட்டிக்காட்டுகிறது.
பெரும்பாலும் ஜெனரிக் மருந்துகளை விற்கும் இந்திய நிறுவனங்கள் ஏற்கெனவே குறைவான லாபத்தில் செயல்படுகின்றன. அதிக வரிவிதிப்பை அந்த நிறுவனங்களால் சமாளிக்க முடியாது.
போட்டி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது அவை மிகக் குறைந்த விலையில் மருந்துகளை விற்கின்றன. மேலும் உலகின் மிகப்பெரிய மருந்து சந்தையில் இதயம், மனநலம், தோல் மருத்துவம் மற்றும் பெண்கள் சுகாதார மருந்துகளில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துகின்றன.
"செலவுக் குறைப்புகள் மூலம் சிறிய அளவு வரிவிதிப்பைச் சமாளிக்க முடியும். ஆனால் வரிவிதிப்பு மிகவும் அதிகமாக இருந்தால் விலையை அதிகரிக்க வேண்டியிருக்கும்," என்று தனது அடையாளத்தை வெளிப்படுத்த விரும்பாத ஒரு முன்னணி இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் நிதித்துறை தலைவர் பிபிசியிடம் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்காவின் மருந்து சந்தை
வட அமெரிக்கா இந்த நிறுவனங்களின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகும். இது பெரும்பாலான நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது.
"இது வேகமாக வளர்ந்து வரும், மிகவும் முக்கியமான சந்தை. மற்ற சந்தைகளுக்கு மருந்துகளைக் கொண்டு சென்றாலும்கூட அமெரிக்க சந்தையில் ஏற்படும் இழப்புகளை அது ஈடுசெய்யாது," என்று அவர் மேலும் தெரிவித்தார்.
வணிக நிறுவனங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை வரிகள் முடிவு செய்யக்கூடாது. ஏனெனில் 'நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அந்த வரிகள் நீங்கிவிடக்கூடும்' என்று இந்தியாவின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமான சிப்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி உமங் வோஹ்ரா சமீபத்தில் ஒரு கூட்டத்தில் தெரிவித்தார்.
ஆனால் நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட காலம். பல நிறுவனங்களின் அதிர்ஷ்டத்தை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ இதனால் முடியும்.
- வங்கதேச ராணுவத்தில் அதிகாரக் கவிழ்ப்பு முயற்சி நடந்ததா? உண்மை என்ன?8 மணி நேரங்களுக்கு முன்னர்
அமெரிக்க மருந்துகளின் மீதான இந்தியாவின் இறக்குமதி வரிகள்

பட மூலாதாரம், Getty Images
"இவற்றையெல்லாம் தவிர்க்க இந்தியா மருந்துப் பொருட்கள் மீதான இறக்குமதி வரிகளைக் குறைக்க வேண்டும்" என்று மூத்த சந்தை நிபுணர் அஜய் பக்கா பிபிசியிடம் கூறினார்.
"இந்தியாவுக்குள் வரும் அமெரிக்க மருந்துகளின் மதிப்பு சுமார் 50 கோடி டாலர்கள் மட்டுமே. எனவே தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.
பதிலடி வரி காரணமாக இந்தியா எதிர்மறையாக பாதிக்கப்படாமல் இருக்க, அமெரிக்கா இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் மருந்துகள் மீதான வரிவிதிப்பை விலக்க வேண்டும் என்று இந்தியாவின் மிகப் பெரிய மருந்து உற்பத்தியாளர்களைக் கொண்ட ஐபிஏ பரிந்துரைத்துள்ளது.
இந்தியாவின் சமீபத்திய பட்ஜெட்டில், அடிப்படை சுங்க வரியில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியலில் 36 உயிர் காக்கும் மருந்துகள் சேர்க்கப்பட்டன. இந்தியா தனது அழுத்தத்திற்கு அடிபணியக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் கோடிட்டுக் காட்டினார்.
"யாரோ ஒருவர் இறுதியாக அவர்கள் செய்ததை அம்பலப்படுத்தியதால், 'பெருமளவில் வரியைக் குறைக்க' இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது" என்று அவர் கூறினார்.
இந்தியா இதற்கு இன்னும் பதிலளிக்கவில்லை. ஆனால் இரு நாடுகளிலும் உள்ள மருந்து நிறுவனங்கள், உயிர்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தின் வடிவத்தைக் காண பதற்றமாகக் காத்திருக்கின்றன.
"புதிய வரிவிதிப்பு காரணமாக குறுகியகால சிக்கல்கள் இருக்கலாம். ஆனால் இன்னும் சில மாதங்களில் முதல் கட்ட (வர்த்தக) ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கிறேன்," என்று அமெரிக்க-இந்திய செயல் உத்திக் கூட்டாண்மை மன்றத்தின் மூத்த ஆலோசகர் மார்க் லின்ஸ்காட் பிபிசியிடம் கூறினார்.
"மருந்து விநியோகச் சங்கிலிகளில் ஏற்படும் முறிவை இரு நாடுகளாலும் தாங்க முடியாது" என்று அவர் கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)