ARTICLE AD BOX
37 வயதாகும் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஓப்பனிங் பேட்ஸ்மேன டேவிட் வார்னர், ஆஸ்திரேலியா அணிக்காக 2015 ஒருநாள் உலகக்கோப்பை, 2021 டி20 உலகக்கோப்பை ( தொடர்நாயகன் விருது), 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 2023 ஒருநாள் உலகக்கோப்பை என 4 ஐசிசி கோப்பைகளை வென்ற அணியில் நட்சத்திர வீரராக ஜொலித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் 161 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 6,932 ரன்களையும், 111 டெஸ்ட் மேட்ச்சுகளில் விளையாடி 8,695 ரன்களையும் அடித்திருக்கும் டேவிட் வார்னர், இதுவரை 99 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடி 2,894 ரன்கள் விளாசியுள்ளார். அதில் 49 சதங்களும், 98 அரைசதங்களும் அடங்கும்.
ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய வெற்றி வீரராக வலம்வந்திருக்கும் டேவிட் வார்னர, சன்ரைசர்ஸ் அணிக்காக கோப்பை வாங்கிக்கொடுத்த ஒரே கேப்டனாகவும் சாதனை படைத்துள்ளார். அங்கு அவர் 184 இன்னிங்ஸ்களில் விளையாடி 6565 ரன்களை குவித்துள்ளார். அதில் 4 சதங்களும், 62 அரைசதங்களும் அடங்கும்.
தெலுங்கு படத்தில் நடிக்கும் வார்னர்..
ஐபிஎல்லில் இந்திய ரசிகர்களின் இதயங்களை கவர்ந்த டேவிட் வார்னர், தெலுங்கு திரைப்பட பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து இன்னும் நெருக்கமாக தன்னை மாற்றிக்கொண்டார். அல்லு அர்ஜுன் பாடல்களை குடும்பத்துடன் ரீல்ஸ் செய்தும், புஷ்பா படத்தின் ஸ்டைலை பின்பற்றி போஸ் கொடுப்பதும், இந்திய பண்டிகைகளுக்கான உடையில் வந்து போஸ்ட் போடுவதும் என தொடர்ந்து இந்திய மக்களின் நெருக்கமான கிரிக்கெட் வீரராக டேவிட் வார்னர் வலம்வருகிறார்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகில் ராபின்ஹுட் என்ற படத்தின் மூலம் இந்திய சினிமாவிலும் காலடிவைக்க உள்ளார். இயக்குநர் வெங்கி குடுமுலா இயக்கத்தில் நிதின் நடிப்பில் உருவாகியுள்ள தெலுங்கு திரைப்படம் ‘ராபின் ஹூட்’. இந்தப் படத்தை ரவி சங்கர் தயாரிக்கிறார். படத்தில் ஸ்ரீலீலா, லால், வெண்ணிலா கிஷோர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தப்படத்தில் டேவிட் வார்னர் கௌரவ வேடத்தில் நடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
படம் மார்ச் 28-ம் தேதி திரைக்கு வரும் என கூறப்படும் நிலையில், படத்தில் நடித்திருப்பதை உறுதிசெய்து போஸ்ட் செய்திருக்கும் டேவிட் வார்னர் “இந்திய சினிமாவே நான் வருகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.