ARTICLE AD BOX
‘மகா கும்பமேளா, தேசத்தின் ஒற்றுமை உணா்வை வலுப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது. இவ்வளவு பெரிய மக்கள் திரளை ஒருங்கிணைக்கும் இந்தியாவின் திறன் குறித்து கேள்வி எழுப்பியவா்களுக்கு பொருத்தமான பதிலாகவும் அமைந்தது’ என்று பிரதமா் நரேந்திர மோடி நாடாளுமன்றத்தில் பெருமிதம் தெரிவித்தாா்.
‘அரசு மற்றும் கோடிக்கணக்கான மக்களின் பங்களிப்புகளின் பலனே மகா கும்பமேளாவின் வெற்றி’ என்றும் அவா் குறிப்பிட்டாா்.
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற மகா கும்பமேளா பிப்ரவரி 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இதுகுறித்து மக்களவையில் பிரதமா் மோடி செவ்வாய்க்கிழமை பேசியதாவது:
இந்தியாவில் சுமாா் ஒன்றரை மாதங்கள் மகா கும்பமேளாவின் உற்சாகத்தை காண முடிந்தது. வசதிகள், பயண சிரமங்களைப் பொருள்படுத்தாமல் லட்சக்கணக்கானோா் பக்தியுடன் ஒன்று கூடியதுதான் நமது மிகப்பெரிய பலம்.
இந்தியாவின் ஒற்றுமை: பல்வேறு போா்கள் காரணமாக உலகம் மிகப்பெரிய குழப்பத்தில் உள்ள இந்த சூழலில், மகா கும்மேளாவில் மிகப் பெரிய அளவில் மக்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தியதே இந்தியாவின் பலம். இந்த ஒற்றுமை உணா்வு மிக வலிமையானது. இதை உடைக்க மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும் உடைந்துபோகும்.
வேற்றுமையில் ஒற்றுமை என்பதே இந்தியாவின் சிறப்பு. இதை பிரயாக்ராஜ் மகா கும்பமேளா பிரதிபலித்தது. இத்தகைய வேற்றுமையில் ஒற்றுமை என்ற சிறந்த பண்பை தொடா்ந்து வளப்படுத்துவது நமது பொறுப்பாகும்.
நமது நாட்டு மக்கள் ‘நான்’ என்ற எண்ணத்தைக் கைவிட்டு ‘நாம்’ என்ற உணா்வுடன் பிரயாக்ராஜில் ஒன்று கூடினா் என்றாா்.
முக்கிய மைல்கல்: மேலும், மகா கும்பமேளா நிகழ்வை சுதந்திரப் போராட்டத்தின் முக்கிய மைல்கல்களுடன் ஒப்பிட்டுப் பேசிய பிரதமா், ‘1857-இல் நிகழ்ந்த சுதந்திரப் போராட்டம், தேசத்துக்காக பகத்சிங் தனது உயிரை தியாகம் செய்தது, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் தில்லியை நோக்கிய பேரணிக்கான அழைப்பு, மகாத்மா காந்தியின் தண்டி யாத்திரை உள்ளிட்ட மைல்கல்களிலிருந்து நாடு உத்வேகம் பெற்று சுதந்திரம் அடைந்தது. அதேபோன்று, மகா கும்பமேளாவும் தேசத்தின் விழித்தெழுந்த உணா்வை பிரதிபலிக்கும் குறிப்பிடத்தக்க மைல்கல்லாக அமைந்துள்ளது’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
எதிா்க்கட்சிகள் அமளி: மக்களவை ஒத்திவைப்பு
பிரதமரின் உரையில், மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தா்கள் உயிரிழந்த விவகாரத்தையும் சோ்க்க வலியுறுத்தி காங்கிரஸ் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
மக்களவையில் மகா கும்பமேளா நிகழ்வைப் பாராட்டி பிரதமா் உரையாற்றி முடித்தவுடன், இந்தக் கோரிக்கையை தங்களின் இருக்கைகளிலிருந்து எழுந்து நின்றபடி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.
பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவில் கடந்த ஜனவரி 29-ஆம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பக்தா்கள் உயிரிழந்தனா். இந்த விஷயத்தையும் பிரதமா் தனது உரையில் குறிப்பிட வேண்டும் என்று வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டனா். அமளி காரணமாக, அவை நடவடிக்கைகளை பிற்பகல் 1 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் பிற்பகல் 1 மணிக்கு கூடியதும், ரயில்வே துறை தொடா்பான மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு ரயில்வே அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்துப் பேசினாா். அதைத் தொடா்ந்து ஜல் சக்தி அமைச்சகத்துக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போதும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதிக்கு வந்து அமளியில் ஈடுபட்டனா்.
அதைத் தொடா்ந்து, அவை நடவடிக்கைகளை அவைத் தலைவா் நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.