ARTICLE AD BOX
அசைவ உணவுகளில் அதிகப்படியான சத்துகள் மீனில் இருப்பதாக வல்லுநர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் மத்தி மீனில் ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்திருக்கிறது என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ், மத்தி மீனில் அதிகமாக இருக்கிறது. இவை உடலில் இருக்கும் இரண்டு உறுப்புகளை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கிறது. அதன்படி, இரத்த ஓட்டத்தை சீராக்கி மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பை மத்தி மீன் தடுக்கிறது.
மேலும், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நியாபக மறதி நோய்கள் ஏற்படுவதை இந்த ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்ஸ் தடுக்கிறது. இதன் மூலம் மூளையின் பயன்பாட்டை சீராக இயக்குவதற்கு மத்தி மீன் பயன்படுகிறது. தசை வளர்ச்சிக்கு பெரிதும் தேவைப்படும் புரதமும், மத்தி மீனில் காணப்படுகிறது.
உடல் எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள், மத்தி மீன் எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார். குறிப்பாக, இதனை பொறிக்காமல் குழம்பாக வைத்து சாப்பிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவை மத்தில் மீனில் இருக்கின்றன. இவை எலும்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்கி அவற்றை வலுப்படுத்துகின்றன. எலும்பின் அடர்த்தியையும் இது பராமரிக்கிறது.
இரத்த சிவப்பு அணுக்களை அதிகப்படுத்தும் இரும்புச் சத்தும் மத்தி மீனில் இருக்கிறது. எனவே, இரத்த சோகை நோயின் பாதிப்பையும் இது தடுக்கிறது. மத்தி மீனை தொடர்ச்சியாக சாப்பிடுபவர்களுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகமாக இருக்கும். கண்புரை, மாலைக்கண் போன்ற பாதிப்புகள் ஏற்படும் அபாயமும் மத்தி மீன் சாப்பிடும் போது குறைகிறது.
இதில் இருக்கும் அன்டி ஆக்சிடென்ட்ஸ் புற்றுநோய் உருவாக்கும் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது. மத்தி மீனை அன்றாட உணவில் எடுத்துக் கொள்ளும் போது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு சீராக பராமரிக்கப்படுகிறது.
இத்தகைய சத்துகள் நிறைந்த மத்தி மீன், நம் உணவில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும் என மருத்துவர் மைதிலி தெரிவித்துள்ளார்.
நன்றி - Dr.Mythili - Ayurveda Doctor & Dietitian Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.