ARTICLE AD BOX
தலை முடி உதிர்வு பிரச்சனை தற்போது சாதாரண ஒன்றாக மாறி விட்டது. இதற்கான தீர்வுகளை இணையத்தில் தேடாதவர்களே இருக்க முடியாது. ஆனால், நம்முடைய சில பழக்க வழக்கங்களால் கூட தலை முடி உதிர்வு ஏற்படலாம். அந்த விதத்தில் தலை முடி உதிர்வை குறைக்க, நாம் பின்பற்றக் கூடிய மூன்று டிப்ஸ்களை அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
முதன்முதலாக ஊடகத் துறைக்கு பணியாற்ற வந்த போது, தன்னுடைய முடி இதை விட அதிகமாகவும், அடர்த்தியாகவும் இருந்ததாக அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். எனினும், அதன் பின்னர் அடிக்கடி ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்ய வேண்டிய நிர்பந்தத்தால் முடியின் அடர்த்தி குறைந்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார். எனவே, தொடர்ச்சியாக தலைமுடிக்கு ஹேர் ஸ்ட்ரைட்டனிங் செய்யக் கூடாது என்று அவர் வலியுறுத்துகிறார்.
இது தவிர ஷாம்பு மற்றும் கண்டிஷனர் ஆகியவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கும். இவை முடியின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்பட்டாலும், சரியான முறையில் உபயோகித்தால் மட்டுமே பலம் அளிக்கும். இல்லையென்றால் முடி உதிர்வுக்கு இது போன்ற பொருட்களே காரணம் ஆகிவிடும். அந்த வகையில் கண்டிஷனரை முடியின் வேர்ப்பகுதியில் படும்படி பயன்படுத்தக் கூடாது என்று அனிதா சம்பத் தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக முடியின் மேற்பகுதியில் மட்டுமே இவற்றை பயன்படுத்த வேண்டும்.
இன்றைய சூழலில் தலைக்கு எண்ணெய் தேய்ப்பது குறித்து இணையத்தில் மிகப்பெரிய விவாதமே நடக்கிறது. சிலர் தலைக்கு எண்ணெய் தேய்த்தாலும் பலன் அளிக்காது என்று கூறுகிறார்கள். ஆனால், அனிதா சம்பத், தான் தலைக்கு எண்ணெய் தேய்க்கும் வழக்கத்தை பின்பற்றுவதாக கூறுகிறார். குறிப்பாக, தலைக்கு குளிப்பதற்கு முன்பாக முடி காய்ந்து இருக்காத வகையில், தான் பார்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். பெரும்பாலும், இரவில் எண்ணெய் தேய்த்து விட்டு காலையில் தலைக்கு குளிப்பதாக அனிதா சம்பத் கூறுகிறார்.
அவ்வாறு முடியாத சூழலில் காலையில் தலைக்கு எண்ணெய் தேய்த்த பின்னர், குளிக்கச் செல்வதாக அவர் கூறுகிறார். இந்த மூன்று விஷயங்களை பின்பற்றினால் தலை முடியை சரியாக பராமரிக்கலாம் என்று அனிதா சம்பத் அறிவுறுத்தியுள்ளார்.
நன்றி - Say Swag Youtube Channel
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.