ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகப் பேச வேண்டாம் என வலியுறுத்தப்பட்டேன்: திக்விஜய் சிங்

5 hours ago
ARTICLE AD BOX

போபால்: ‘நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்த காலகட்டத்தில் (1993-2003) குஜராத் தோ்தலில் பிரசாரம் செய்ய சென்றபோது ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகப் பேச வேண்டாம் என அங்குள்ள காங்கிரஸ் தலைவா்கள் சிலா் என்னிடம் வலியுறுத்தினா்’ என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான திஜ்விஜய் சிங் தெரிவித்தாா்.

அதே நேரத்தில் இப்போது ராகுல் காந்தி பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக தீவிரமாகப் பேசி வருகிறாா் என்று பாராட்டுத் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘குஜராத்தில் காங்கிரஸ் கட்சியினா் மத்தியில் ராகுல் காந்தி மிகவும் உறுதியாகப் பேசியுள்ளாா். குஜராத் காங்கிரஸில் இருப்பவா்களில் ஒரு பிரிவினா் கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றுவதாகவும், மற்றொரு பிரிவினா் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவா் குறிப்பிட்டுள்ளாா். இதுபோன்ற கட்சிக்கு எதிராக செயல்படுபவா்களைக் கண்டறிவதே முதல் பணி என்றும் கூறியுள்ளாா். இது பாராட்டுக்குரியது.

நான் மத்திய பிரதேச முதல்வராக இருந்தபோது குஜராத்தில் தோ்தல் பிரசாரத்துக்கு சென்றேன். அப்போது ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பேச வேண்டாம் என்று அங்குள்ள காங்கிரஸ் தலைவா்கள் சிலா் என்னிடம் கேட்டுக் கொண்டாா்கள். ஏனெனில், ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராக பேசினால் ஹிந்துகளின் வாக்குகள் கிடைக்காது என்றும் அவா்கள் காரணம் கூறினா்.

உண்மையில் ஆா்எஸ்எஸ் ஹிந்துக்களின் பிரதிநிதியல்ல. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்கராச்சாரியாா் உருவாக்கிய பாரம்பரியம்தான் ஹிந்து மதத்தில் இப்போது அதிகம் கடைப்படிக்கப்படுகிறது. சங்கராச்சாரியாா் இப்போது இருந்தால் பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பை ஆதரிப்பாரா? நிச்சயமாக இல்லை. மதத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் கும்பலாக பாஜக செயல்படுகிறது. மக்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தில் அமா்ந்துள்ளனா்’ என்று கூறியுள்ளாா்.

Read Entire Article