ARTICLE AD BOX
சென்னை: ஆனந்த விகடன் இணையதளத்தை முடக்கியதை நீக்குமாறு ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அருகில் பிரதமர் நரேந்திர மோடி சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் அமர்ந்திருப்பதைப் போன்று கார்ட்டூன் ஒன்று விகடனின் இணைய இதழான விகடன் பிளஸ்ஸில் வெளியிடப்பட்டது. இந்த கார்ட்டூன் தொடர்பாக தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் அடிப்படையில், விகடனின் இணையதளம் கடந்த மாதம் 15ம் தேதி முடக்கப்பட்டது.
இந்நிலையில், தொலைத்தொடர்புத் துறைக்கு ஒன்றிய தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் அளித்த பரிந்துரையின்படி விகடன் பத்திரிகையின் இணையதளம் இந்தியாவில் முடக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் விகடன் நிறுவனம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.பரதசக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆனந்த விகடன் நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜயநாராயணன் ஆஜராகி வாதிட்டபோது, இணையதளத்தை முடக்கியது ஊடக சுதந்திரத்தை பறிக்கும் செயலாகும். விகடனில் வெளிவந்த கார்ட்டூன் இந்திய இறையாண்மைக்கு எதிரானது அல்ல என்றுார். வழக்கை விசாரித்த நீதிபதி, இணையதளம் முடக்கத்தை நீக்குமாறு ஒன்றிய அரசு உத்தரவிட்டார். அதேபோல், சம்பந்தப்பட்ட கார்ட்டூனை பிளாக் செய்யுமாறு ஆனந்த விகடன் நிறுவனத்துக்கும் நீதிபதி அறிவுறுத்தினார்.
The post ஆனந்த விகடன் இணையதள முடக்கத்தை நீக்க வேண்டும்: ஒன்றிய அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.