ARTICLE AD BOX
காரசாரம் என்றாலே ஆந்திரா தான் அதற்கு சரியான மாநிலமாக இருக்கிறது. எல்லாவற்றிலுமே காரத்தை அதிகம் சேர்த்து சமைக்கும் இவர்களுக்கு நல்ல காரம் பொடி ரொம்ப விருப்பமான ஒரு பொடியாக இருக்கிறது. இந்த கார பொடியை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவார்கள் அல்லது பொடி தோசை, பொடி இட்லி போன்றவை செய்தும் சாப்பிடுவார்கள். ரொம்பவே டேஸ்டியாக இருக்கக் கூடிய இந்த ஆந்திரா ஸ்டைல் நல்ல காரம் பொடி ரெசிபி நாமும் எப்படி எளிதாக செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்வோம் வாங்க.
*நல்ல காரம் பொடி செய்ய தேவையான பொருட்கள்:*
வர மிளகாய் – 30, பூண்டு பல் – ஒரு கைப்பிடி, கடலைப்பருப்பு – மூன்று டேபிள் ஸ்பூன், தனியா – மூணு டேபிள் ஸ்பூன், புளி – சிறு கோலி குண்டு அளவிற்கு, கருவேப்பிலை – ஒரு கைப்பிடி, சமையல் எண்ணெய் – தேவையான அளவிற்கு, உப்பு – தேவையான அளவு.
*நல்ல காரம் பொடி செய்முறை விளக்கம்:*
நல்ல காரம் பொடி செய்வதற்கு முதலில் வெறும் வாணலியில் பூண்டு பற்களை தோலுடன் சேர்த்து அப்படியே லேசாக வறுத்துக் கொள்ளுங்கள். ரெண்டு நிமிடம் லேசாக வறுத்த பின்பு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் அந்த வாணிலியில் ஒரு ஸ்பூன் அளவிற்கு மட்டும் எண்ணெய் விட்டுக் கொள்ளுங்கள்.
பின்னர் அதில் வர மிளகாய்களை காம்புகள் எல்லாம் நீக்கிவிட்டு சேர்த்து லேசாக உப்பி வர வறுத்து எடுக்க வேண்டும். நிறம் மாறி விடக்கூடாது என்பதையும் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நிமிடம் நன்கு வறுத்து எடுத்த பின்பு அதே வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு கொள்ளுங்கள். பின் அதில் கடலை பருப்பு சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். பருப்பு நன்கு வறுபட்டதும் தனியா விதைகளை சேர்த்து வறுக்க வேண்டும்.
பின்னர் இதனுடன் ஒரு சிறு கோலி குண்டு அளவிற்கு புளியை எடுத்து துண்டு துண்டாக பிச்சி போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் ஒரு கைப்பிடி அளவிற்கு பிரஷ்ஷான பச்சை கருவேப்பிலை இலைகளை சேர்த்து வதக்குங்கள். அவ்வளவுதான், இப்போது இதை ஆற விட்டுவிட்டு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் நீங்கள் வறுத்து எடுத்து வைத்துள்ள மிளகாயை சேர்த்து ஒரு முறை சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதிலேயே நீங்கள் வறுத்த எல்லா பொருட்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளுங்கள்.
கடைசியாக தான் நீங்கள் முதலில் வறுத்த தோலுடன் கூடிய பூண்டை சேர்த்து சுற்ற வேண்டும். ரொம்பவும் நைசாக இல்லாமல் கொரகொரவென்று அரைந்தால் போதுமானது. இந்த சூப்பரான நல்ல காரம் பொடி 20 நாட்கள் வரை வெளியில் வைத்தே தாராளமாக பயன்படுத்தலாம். தோசை சுடும் போது அதன் மேலே அழகாக தூவி சுட்டு எடுத்தால் பொடி தோசை ரெடி! இது போல இட்லி கூட செய்யலாம். சூடான சாதத்தில் அப்படியே நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம், நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.