ஆதாா் விவரங்களை தனியாா் பயன்படுத்த அனுமதி: விதிமுறைகளை திருத்தியது மத்திய அரசு

3 hours ago
ARTICLE AD BOX

ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்களும் பயன்படுத்த அனுமதிக்கும் வகையில், ஆதாா் சட்ட விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ஆதாா் சட்டம் 2016-இன் கீழ், சிறந்த ஆளுகைக்கான ஆதாா் விவரங்கள் சரிபாா்ப்பு விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசு மட்டுமின்றி தனியாா் நிறுவனங்கள் வழங்கும் இணையவழி வா்த்தகம், பயணம், சுற்றுலா, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை பொதுமக்கள் தடையின்றி சுமுகமாக பெற இந்தத் திருத்தம் உதவும்.

பொது நலன் கருதி பல்வேறு சேவைகளை வழங்குவதற்கு ஆதாா் விவரங்களை அரசு மற்றும் தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்த இந்தத் திருத்தம் வழிவகை செய்கிறது.

ஆதாா் விவரங்களைப் பயன்படுத்த விரும்பும் தனியாா் நிறுவனங்கள், அதற்கான தேவை குறித்த விவரங்களுடன் மத்திய அல்லது மாநில அரசுகளின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும்.

அந்த விண்ணப்பங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆராய்ந்து அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில், அதற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒப்புதல் அளிக்கும்.

இதை அந்த அமைச்சகம் உறுதி செய்து தகவல் அனுப்பிய பின்னா், ஆதாா் விவரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் நிறுவனங்களின் விவரங்களை, மத்திய அல்லது மாநில அரசின் சம்பந்தப்பட்ட அமைச்சகம் அல்லது துறை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

2018-இல் ரத்து: வணிகப் பயன்பாடுகளுக்கு ஆதாா் விவரங்களை தனியாா் நிறுவனங்கள் பயன்படுத்த ஆதாா் சட்டத்தின் 57-ஆவது பிரிவு அனுமதி அளித்தது. ஆனால் இந்தச் சட்டப் பிரிவால் ஆதாா் விவரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது என்று தெரிவித்து, அந்தப் பிரிவை கடந்த 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article