ARTICLE AD BOX
புதுடெல்லி: வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது தொடர்பாக யுஐடிஏஐ மற்றும் தேர்தல் ஆணைய நிபுணர்கள் இடையே தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்க இருக்கிறது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது தொடர்பான விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம், உள்துறை செயலாளர், சட்ட அமைச்சக செயலாளர், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் மற்றும் ஆதார் அட்டைகளை வழங்கும் யுஐடிஏஐ சிஇஓ ஆகியோருடன் ஆலோசனை நடத்தியது. இதைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையம் விடுத்த அறிக்கையில், ‘வாக்களிக்கும் உரிமையை இந்திய குடிமகனுக்கு மட்டுமே வழங்க முடியும் என்றாலும், அரசியலமைப்பின் பிரிவு 326ன் படி, ஆதார் ஒரு நபரின் அடையாள சான்று மட்டுமே தவிர, குடியுரிமை ஆவணமல்ல.
எனவே, வாக்காளர் அடையாள அட்டையை ஆதாருடன் இணைப்பது அரசியலமைப்பின் பிரிவு 326, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950ன் பிரிவுகள் 23(4), 23(5) மற்றும் 23(6) மற்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே செய்யப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, யுஐடிஏஐ மற்றும் தேர்தல் ஆணையத்தின் தொழில்நுட்ப நிபுணர்கள் இடையே தொழில்நுட்ப ஆலோசனை விரைவில் தொடங்கப்பட உள்ளது’ என கூறப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அவர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர் அட்டையை ஆதாருடன் இணைக்க சட்டம் அனுமதிப்பது குறிப்பிடத்தக்கது.
The post ஆதார்-வாக்காளர் அட்டை இணைப்பு தேர்தல் கமிஷன், யுஐடிஏஐ விரைவில் ஆலோசிக்க முடிவு appeared first on Dinakaran.