ஆதார் கார்டு நமது அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறிவிட்டது. பல்வேறு சேவைகளைப் பெறுவதற்கும் ஆதார் கார்டு அவசியம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைத்து வயதினருக்கும் ஆதார் கார்டு வழங்கப்பட்டுள்ளது. அப்படி வழங்கப்பட்டிருக்கும் ஆதார் கார்டு எத்தனை வருடங்கள் செல்லுபடியாகும்? இதற்கு எக்ஸ்பயரி உண்டா? என்ற விவரங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஆதார் கார்டு எப்போது செல்லாமல் போகும்?: குழந்தைகளுக்கும் பால் ஆதார் அல்லது பால்ய ஆதார் என்ற பெயரில் ஆதார் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பிக்க வேண்டும். குழந்தைக்கு 5 வயதாகும்போது ஒரு முறையும், மற்றொன்று 15 வயதாகும்போது ஒரு முறையும் புதுப்பிக்க வேண்டும். ஏன் இந்த புதுப்பிப்பு என்றால் குழந்தை பிறந்து 5 வயதாகும்போது.. அவர்களுடைய முகம், கை ரேகை, கருவிழி போன்ற பாகங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதனால் தான் இந்த புதுப்பிப்பு.

ஒரு வேளை இந்த 2 புதுப்பிப்புகளையும் செய்யவில்லை என்றால்.. அப்போது ஆதார் கார்டு செல்லாததாகக் கருதப்படும். கண்டிப்பாக குழந்தைகளின் ஆதார் கார்டை இரண்டு முறை புதுப்பித்தே ஆகவேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டு புதுப்பிப்பது அவசியமா?: ஆதார் கார்டு வழங்குனரான இந்திய தனித்துவ அடையாள அணையம் (UIDAI) ஆதார் கார்டை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க பரிந்துரைக்கிறது. 10 ஆண்டுகளுக்குள் சிலர் தங்களுடைய தனிப்பட்ட விபரங்களை மாற்றி இருப்பார்கள். உதாரணமாக சிலர் வீடு மாறி இருப்பார்கள், சிலர் தங்கள் மொபைல் நம்பரை மாற்றி இருப்பார்கள். இதுபோன்ற சூழ்நிலையில் கண்டிப்பாக ஆதார் கார்டை புதுப்பிக்க வேண்டும். ஏனெனில் அனைத்து சேவைகளுக்கும் தற்போது ஓடிபி சரிபார்ப்பு செய்யப்படுகிறது.
இதற்காகத்தான் இந்த புதுப்பிப்பு. ஆனால் கடந்த 10 வருடங்களுக்குள் நீங்கள் எந்த ஒரு விவரங்களையும் மாற்றவில்லை என்றால்.. நீங்களே ஒரு முறை தற்காப்புக்காக உங்கள் ஆதார் கார்டில் தனிப்பட்ட தகவல்களை சரி பார்த்துக் கொள்ளலாம். மாற்றம் இல்லாமல் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. நீங்கள் எந்தவித புதுப்பிப்பையும் செய்ய வேண்டியதில்லை.
அதுவே ஆதார் கார்டு தகவல்களில் மாற்றம் இருந்தால் கண்டிப்பாக அப்டேட் செய்து கொள்ள வேண்டும். தற்போது சமூக ஊடக தளங்களில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் கார்டு புதுப்பிக்கவில்லை என்றால் அவை செல்லாது என்ற வதந்தி பரப்பப்படுகிறது. இது முற்றிலும் பொய். மேலே கூறப்பட்டுள்ள சில காரணங்களுக்காகத்தான் இந்த புதுப்பிப்பு. ஒருவேளை நீங்கள் எந்த தகவல்களையும் மாற்றவில்லை என்றால் ஆதார் புதுப்பிக்கவில்லை என்றாலும் செல்லுபடி ஆகும்.
ஆதார் கார்டுக்கு எக்ஸ்பயரி தேதி உண்டா?: ஆதார் கார்டுக்கு எந்த வித எக்ஸ்பைரி தேதியும் கிடையாது. ஒரு குழந்தை பிறந்தவுடன் ஒரு ஆதார் கார்டு வழங்கப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஆதார் நம்பர் தான் குழந்தையின் வாழ்நாள் காலம் முழுவதும் பயன்படுத்தப்படும். ஆனால் விவரங்களில் ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் அவ்வப்போது அப்டேட் செய்து கொள்வது அவசியம்.