பெங்களூரு, கர்நாடகா: பெங்களூருவில் வீடு வீடாக சென்று குப்பைகளை சேகரிப்பதற்கு வீட்டு உரிமையாளர்கள், கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
வீடுகளில் இருந்து குப்பைகளை பெறுவதற்காக பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் ஒரு வீட்டிற்கு 10 ரூபாய் முதல் 400 வரை கட்டணம் வசூலிக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.குப்பை மேலாண்மைக்கான பயனர் கட்டணம் என்ற பெயரில் ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியுடன் சேர்த்து இந்த கட்டணத்தையும் கூடுதலாக செலுத்த வேண்டி இருக்கும்.

பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை கழகம் கடந்த நவம்பர் மாதமே நகர்ப்புற மேம்பாட்டு துறையிடம் ஒரு பரிந்துரையை வழங்கியிருந்தது. அதில் வீடுகளிலிருந்து குப்பைகளை பெற்று அதனை மேலாண்மை செய்வதற்கு வீட்டு உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க வேண்டும் என கூறியிருந்தது. இதன்படி பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் சொத்து வரியோடு சேர்த்து இந்த குப்பைகளை சேகரித்து மேலாண்மை செய்வதற்கான கட்டணத்தையும் வசூல் செய்ய இருக்கிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.
இது ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெங்களூரு துணை முதலமைச்சர் டி கே சிவக்குமார் தலைமையிலான நகர்ப்புற மேம்பாட்டு துறை இதற்கான அதிகாரப்பூர்வ தகவலை விரைவில் வெளியிட உள்ளது. தற்போதைக்கு பெங்களூருவில் பெங்களூருவில் வீடு வீடாக சென்று மாநகராட்சி சார்பாக குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. இவ்வாறு வீட்டுக்கு வீடு சென்று குப்பைகளை சேகரிப்பது மற்றும் அகற்றுவது போன்ற சேவைகளுக்கு இந்த நிதி தேவைப்படுவதாக சொல்லப்படுகிறது.
இந்த கட்டணம் மூலம் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை அமைப்பு ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டும் என சொல்லப்படுகிறது. வீட்டின் அளவைப் பொறுத்து இந்த கட்டணமானது மாறுபடுமாம். வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியோடு சேர்த்து இந்த குப்பை சேகரிப்புக்கான கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். தற்போதைக்கு ஆறு விகிதங்களில் கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
குறைந்தபட்சம் 600 சதுர அடி வரை கொண்ட வீடுகளில் 10 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும், அதேபோல 4000 சதுர அடிக்கும் மேல் இருக்கக்கூடிய வீடுகளுக்கு 400 ரூபாய் என கட்டணம் வசூலிக்கப்படும் என சொல்லப்படுகிறது. இவ்வாறு குப்பை சேகரிப்புக்கான கட்டணம் விதிக்கப்படுவதால் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து பெங்களூரை சேர்ந்த வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரி சற்று உயர்வதை பார்ப்பார்கள். இது தவிர பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் விளம்பர ரீதியாக செயல்படும் கட்டடங்களில் பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை அமைப்பு குப்பைகளை பெற்று மேலாண்மை செய்வதற்கு ஒரு கிலோவுக்கு 12 ரூபாய் என்ற அளவில் வசூல் செய்ய கர்நாடக மாநில அரசு அனுமதி தந்துள்ளது.
ஏற்கனவே பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் தங்களுடைய சொத்து வரியுடன் சேர்த்து திடக்கழிவு மேலாண்மைக்கு செஸ் வரியை செலுத்தி வருகின்றனர். இந்த வரியோடு சேர்த்து தற்போது இந்த கட்டணமும் வசூல் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. பொது இடங்கள் மற்றும் தெருக்களை சுத்தமாக வைப்பதற்கும் பராமரிப்பதற்கும் இந்த செஸ் வரி பயன்படுத்தப்படுகிறது.