ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை

5 hours ago
ARTICLE AD BOX

ஆதவி: பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல்' அங்கீகாரம் பெற்ற குழந்தை

'கார்பன் நியூட்ரல்' குழந்தை, ஆதவி

பட மூலாதாரம், Dinesh_SP

படக்குறிப்பு, ஆதவி
  • எழுதியவர், அம்ரிதா பிரசாத்
  • பதவி, பிபிசி தமிழ்
  • 3 நிமிடங்களுக்கு முன்னர்

பொம்மை கார் வைத்து விளையாடும் வயதில், 'கார்பன் நியூட்ரல்' குழந்தை என்ற பெருமையுடன் ஆதவி என்ற பெண் குழந்தை, ஏஷியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருக்கிறார். அவருக்குத் தற்போது 2 வயதாகிறது.

புவி வெப்பமடைதல், காற்று மாசுபாடு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகள் அதிகரித்து வருவதால், வரும் தலைமுறையினருக்கு கடும் விளைவுகள் ஏற்படக் கூடும் என்ற இன்றைய அச்சுறுத்தும் சூழலில் ஆதவி ஒரு சிறந்த முன்னுதாரணம்.

பெற்றோரின் முயற்சியால் ஆதவிக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவர்கள் இதைச் செய்ததற்கான காரணம் என்ன? கார்பன் நியூட்ரல் குழந்தை என்பதன் பொருள் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கார்பன் நியூட்ரல் என்றால் என்ன?

இதைத் தெரிந்துகொள்வதற்கு முன்பாக கார்பன் அடிச்சுவடு (carbon footprint) பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, கார்பன் அடிச்சுவடு என்பது ஒரு குறிப்பிட்ட நபர், அமைப்பு அல்லது செயல்பாட்டால் உலகின் வளிமண்டலத்தில் வெளியிடப்படும் பசுமை இல்ல வாயுவின் அளவு.

ஒரு தனிநபரின் கார்பன் அடிச்சுவடு அதிகமாக இருக்கிறது என்றால் அவர் கார்பன் டை ஆக்சைடு(கரிம வாயு), மீத்தேன் போன்ற வாயுக்களை அதிக அளவில் வெளியிடுகிறார் என்று பொருள்.

கார்பன் நியூட்ரல் என்பது ஒரு தனிநபர் அல்லது அமைப்பு வெளியிடும் கரிம வாயுவின் அளவு, இயற்கையாகவோ அல்லது செயற்கையாகவோ நீக்கப்படும் கரிம வாயுவின் அளவுக்குச் சமமாக இருக்கும் நிலை என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவிக்கின்றது.

அதாவது, வளிமண்டலத்தில் வெளியிடப்படும் கரிம வாயுவின் அளவை, மரங்கள் வளர்ப்பது, புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவது போன்ற செயல்களின் மூலம் ஈடுசெய்து, நிகர கார்பன் வெளியீட்டை (Net carbon emission) பூஜ்ஜியமாகக் கொண்டு வருவதாகும்.

சர்வதேச ஆற்றல் முகமையின் (International Energy Agency) தரவுகள்படி, உலக அளவில் சராசரியாக ஒரு தனிநபரின் கார்பன் அடிச்சுவடு 4.7 டன். ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிறுவனத்தின்படி (Institute of Energy and Environment), ஒரு தனிநபர் தனது வருடாந்திர கார்பன் வெளியேற்றத்தை ஈடு செய்யச் சுமார் 165 மரங்களை நட வேண்டியிருக்கும்.

பிறப்பதற்கு முன்பே சாதனை

உலகின் முதல் கார்பன் நியூட்ரல்' குழந்தை, ஆதவி

பட மூலாதாரம், Dinesh_SP

படக்குறிப்பு, பெற்றோருடன் ஆதவி

ஆதவி பிறப்பதற்கு முன்பாகவே அவரை ஒரு 'கார்பன் நியூட்ரல் குழந்தையாக' வளர்க்க வேண்டும் என்ற முடிவை அவரது பெற்றோரான தினேஷ் மற்றும் ஜனகநந்தினி எடுத்தனர்.

"காலநிலை மாற்றம் தீவிரமடைந்து வரும் சூழலில், நான் வெளியிடும் கரிம வாயுவால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பால் எனக்கு குற்ற உணர்ச்சி ஏற்பட்டது. அப்போது எனது மனைவியின் வயிற்றில் இருந்த பிறக்காத எங்கள் குழந்தைக்கு நல்ல ஆரோக்கியமான சுற்றுசூழலை உருவாக்க வேண்டும் என்றும் அந்தக் குழந்தையால் உலகத்திற்கு எந்தத் தீங்கும் வரக்கூடாது என்றும் தோன்றியது," என்று பிபிசி தமிழிடம் ஆதவியின் தந்தை தினேஷ் விளக்கினார்.

ஐஐடி மெட்ராஸில் செய்துகொண்டிருந்த வேலையை விட்டுவிட்டு, தினேஷ் 'சீராக்கு' என்ற தொண்டு நிறுவனத்தைத் தொடங்கினார். கார்பன் அடிச்சுவடைக் குறைப்பது எப்படி என்பதை மக்களிடம் ஊக்குவித்து, கார்பன் நியூட்ரல் இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது.

ஆதவி பிறப்பதற்கு முன்பாகவே அவரது பெயரில் 6,000 மரங்களை தினேஷ் – ஜனகநந்தினி தம்பதியர் நடவு செய்தனர். இந்தத் திட்டத்திற்கு 'நோவா' என்றும் பெயர் சூட்டினர்.

"கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்று தெரியாததால் பொதுவான பெயராக இருக்க வேண்டும் என்று 'நோவா' என்ற பெயரைத் தேர்வு செய்தோம். இதற்குப் புதிதாக உருவான நட்சத்திரம் என்று பொருள். பின்னர் அதுவே இந்தத் திட்டத்தின் பெயராக மாறியது" என்கிறார் தினேஷ்.

உலகின் முதல் கார்பன் நியூட்ரல்' குழந்தை, ஆதவி

பட மூலாதாரம், Dinesh_SP

படக்குறிப்பு, ஆதவி பிறப்பதற்கு முன்பாகவே அவரது பெயரில் 6,000 மரங்களை தினேஷ் – ஜனகநந்தினி தம்பதி நடவு செய்தனர்.

இந்தத் திட்டத்திற்காக அந்தத் தம்பதி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுடன் இணைந்து செயல்பட்டனர்.

"எனது மனைவி கருத்தரித்த உடனே அவரது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவலிங்கபுரம் என்ற கிராமத்தில் வேளாண் காடுகள் முறைப்படி விவசாய நிலத்தில் மரங்களை நடவு செய்தோம். எங்களது நோக்கம் மரம் நட வேண்டும்; விவசாயிகளும் இதிலிருந்து பலன் பெற வேண்டும் என்று கருதினோம். இரு தரப்புக்கும் நன்மை கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டது" என்று கூறுகிறார் தினேஷ்.

எலுமிச்சை, கொய்யா, சப்போட்டா, மா, மாதுளை போன்ற 10 வகையான பழ மரங்களையும் அதைச் சுற்றி பாக்கு, தேக்கு உள்ளிட்ட மரங்களையும், சில செடி வகைகளையும் ஆதவியின் பெயரில் நடவு செய்துள்ளனர்.

இதற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவானது என்றும், தற்போது இந்த மரங்களை விவசாயிகள் பராமரித்து வருவதாகவும் அதில் வரும் விளைச்சலை விற்று, சுமார் 400 விவசாயிகள் பலனடைந்து வருவதாகவும் தினேஷ் தெரிவித்தார். மேலும், இந்த மரங்களுக்கு நடுவே சிறு பயிர்களையும், செடிகளையும் ஊடுபயிராக வைத்தும் அவர்கள் விவசாயம் செய்து வருவதாகக் குறிப்பிட்டார் அவர்.

குழந்தை வளர்ப்பு

மரம் நடுவதால் மட்டும் கார்பன் அடிச்சுவடை சமன் செய்யலாம் என்று கிடையாது, அதற்கு 'வளம்குன்றா வாழ்க்கைமுறை' (sustainable lifestyle) தேவை என்கிறார் தினேஷ்.

தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் நிலைத்தன்மை மிக்க, அதீத வளங்களைப் பயன்படுத்தாத மினிமலிஸ்டிக் வாழ்க்கை முறையைப் பின்பற்றுகின்றனர். அதாவது அவர்கள் பிளாஸ்டிக் பயன்பாடு, அநாவசிய மோட்டார் வாகனப் பயணங்கள், தேவையின்றிப் பொருட்களை வாங்குவது போன்றவற்றைக் குறைத்துக் கொள்ளும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.

 பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல் அங்கீகாரம்' பெற்ற ஒரு வயது குழந்தை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நோவா திட்டத்தின் தொடர்ச்சியாக, ஆதவி பிறந்த காவேரி மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஒரு மரம் நடப்படும் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்ததாக தினேஷ் கூறுகிறார். (சித்தரிப்புப் படம்)

"ஆதவியையும் அவ்வாறே வளர்க்கத் திட்டமிட்டோம். அவருக்கு இதுவரை டையாப்பர், பவுடர் போன்ற குழந்தைகளுக்கான பொருட்கள் எதையும் பயன்படுத்தியதில்லை. அவருக்கு நாங்கள் இதுவரை 3 ஆடைகளை மட்டுமே தனியாக வாங்கியுள்ளோம். மற்ற ஆடைகள் குழந்தையின் அம்மா மற்றும் பாட்டியின் புடவைகள் போன்றவற்றில் இருந்து தைக்கப்பட்டவை. ஆதவி விளையாடும் பொம்மைகள் எல்லாம் மரம் மற்றும் ஓலையால் ஆனவை. ஆதவியுடன் எங்கும் அநாவசியமாகப் பயணம் செய்ய மாட்டோம். அவ்வாறே சென்றாலும் நடந்து செல்வோம் அல்லது பொதுப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்துவோம்," என்று தங்கள் வளம்குன்றா வாழ்க்கைமுறை குறித்து விளக்கினார் தினேஷ்.

ஆதவிக்கு இயற்கைமுறை மற்றும் மறுசுழற்சி செய்யப்படும் பொருட்களை மட்டுமே பயன்படுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.

"எங்களது வீட்டிற்கான 50 சதவீத மின்சாரப் பயன்பாடு புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் இருந்து வருகிறது. உணவுப் பொருட்களைக்கூட விவசாயிகளிடம் இருந்து நேரடியாகக் கொள்முதல் செய்வதால் அதிலும் நெகிழிப் பயன்பாட்டைக் குறைக்க முடிகிறது" என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத் தாண்டி ஆதவியின் ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், அவரது பெயரில் 1000 மரங்களை நட அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். தற்போது ஆதவியின் கணக்கில் சுமார் 8 ஆயிரம் மரங்கள் இருக்கின்றன.

"இயற்கை எவ்வாறு செயல்படுகிறது, மரங்கள் எவ்வளவு காலம் உயிர் வாழும் என்பதை நாம் கணிக்க முடியாது. அதிக மரங்கள் இருந்தால் கூடுதல் நன்மை, எனவே அவரது ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் ஆயிரம் மரங்களை நடவுள்ளோம்."

திட்டத்திற்கு அங்கீகாரம்

'கார்பன் நியூட்ரல்' குழந்தை, ஆதவி

பட மூலாதாரம், Dinesh_SP

'நோவா' திட்டத்தைப் பற்றி அறிந்தவுடன் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனை, இந்தத் தம்பதியினரை அணுகியது. ஆதவி கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் தேதி அன்று காவேரி மருத்துவமனையில் பிறந்தார்.

இதன் தொடர்ச்சியாக, அந்த மருத்துவமனையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் பெயரிலும் ஒரு மரம் நடவு செய்யப்படும் என்ற திட்டம் நடைமுறைக்கு வந்ததாகவும் இது மக்கள் பலரிடம் சுற்றுசூழலைக் காப்பாற்ற வேண்டும் என்பதன் முக்கியத்துவத்தைக் கொண்டு செல்ல உதவியதாகவும் தினேஷ் கூறுகிறார்.

இதன் பிறகு அடுத்தடுத்து ஐக்கிய நாடுகள் சபையின் நிலைத்தன்மை வளர்ச்சிக் குழு (Sustainability Development Council) மற்றும் ஆசியா சாதனைகள் புத்தகத்தின் (Asian book of records) பார்வைக்கு இந்த 'நோவா' திட்டம் சென்றடைந்தது.

"பிறந்த தினம் முதல் நிகர கார்பன் வெளியீட்டை பூஜ்ஜியமாக வைத்திருப்பது அல்லது சமநிலைப்படுத்துவதால் ஆதவிக்கு 'உலகின் முதல் கார்பன் நியூட்ரல் குழந்தை' என்ற அங்கீகாரத்தை ஆசியா சாதனைகள் புத்தகம் வழங்கியது.

தனது பெற்றோரின் முயற்சியால், மரம் நடுவது போன்ற கரிம வாயு வெளியீட்டை ஈடுசெய்வது போன்ற செயல்முறைகளின் விவரங்களை ஆராய்ந்த பின்னர் அவருக்கு இந்தப் பட்டம் வழங்கப்பட்டது" என்று கூறுகிறார் ஆசியா சாதனைகள் புத்தகத்தில் சாதனைகளைத் தீர்மானிக்கும் அலுவலர் (adjudicator) விவேக்.

உலகின் முதல் கார்பன் நியூட்ரல்' குழந்தை, ஆதவி

பட மூலாதாரம், Dinesh_SP

படக்குறிப்பு, பிறந்து வெறும் 11 மாதம் 16 நாட்களிலே 'இளம் வயதில் கார்பன் நியூட்ரல் என்ற நிலையை அடைந்தவர்' என்ற பட்டத்தை ஆசியா சாதனைகள் புத்தகம் ஆதவிக்கு வழங்கி கௌரவித்தது.

பிறந்து வெறும் 11 மாதம் 16 நாட்களிலே 'இளம் வயதில் கார்பன் நியூட்ரல் என்ற நிலையை அடைந்தவர்' என்ற பட்டத்தை ஆசியா சாதனைகள் புத்தகம், கடந்த ஆண்டு மார்ச் 3ஆம் தேதியன்று ஆதவிக்கு வழங்கி கௌரவித்தது.

இந்த நிகழ்வுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வளம்குன்றா வளர்ச்சிக் குழு மற்றும் தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கம் இணைந்து செயல்பட்டதாக தினேஷ் தெரிவித்தார்.

மேலும் இந்த முயற்சிக்காக தமிழ்நாடு அரசின் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் தூதராகவும் ஆதவி ஆனார். 2022ஆம் ஆண்டு தொடங்கிய இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கம், வரும் 10 ஆண்டு காலத்துக்குள் மரங்கள் நடுதல், காடுகளைப் பாதுகாத்தல் போன்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஊக்குவிப்பதன் மூலம் மாநிலத்தின் பசுமைப் பரப்பை 23.7 சதவீதத்தில் இருந்து 33 சதவீதமாக அதிகரிப்பதாகும்.

இதுகுறித்து அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் திட்ட இயக்குநர் தீபக் ஸ்ரீவத்சவா, "உலகில் கரிம உமிழ்வானது தற்போது மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. ஆதவி என்ற குழந்தையின் மூலம் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் பல்வேறு குடும்பங்களுக்கும், சமுதாயத்திற்கும் ஒரு விழிப்புணர்வாகவும் முன்னுதாரணமாகவும் இருக்கும்" என்றார்.

பசுமையான உலகம்

 பொம்மைகளுடன் விளையாடும் வயதில் 'கார்பன் நியூட்ரல் அங்கீகாரம்' பெற்ற ஒரு வயது குழந்தை

பட மூலாதாரம், Getty Images

ஆதவியின் பெயரில் உள்ள மரங்களைத் தாண்டி, சீராக்கு தொண்டு நிறுவனத்தின் மூலம், 4 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளார் தினேஷ். அதில் 3 லட்சம் மரங்களை விவசாய நிலங்களில் மட்டுமே நடவு செய்துள்ளார்.

மேலும் இந்த 'நோவா' திட்டத்தின் மூலம் மற்ற மக்களுக்கு கார்பன் அடிச்சுவடு பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தத் திட்டத்தின் விளைவாக 25 பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக இதே போல மரங்களை நடுகின்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக தினேஷ் குறிப்பிட்டார்.

அதோடு, சில தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து அதில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்காக ஒரு மரக்கன்று நடுவது போன்ற முயற்சியிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் சி.எஸ்.ஆர் நிதியின் மூலமும் கார்பன் நியூட்ரல் உலகம் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப் பல்வேறு சுற்றுச்சூழல் பாதுகாப்பு செயல்முறைகளை தினேஷ் செய்து வருகிறார்.

இதுகுறித்துப் பேசிய தினேஷ், "இதை ஓர் உதாரணமாக எடுத்து ஒவ்வொரு நபரும், உலகத்தைப் பாதுகாக்க சமூக அக்கறையுடன் செயல்பட வேண்டும். ஆதவியின் இந்த 'நோவா' திட்டத்தின் மூலம் 'சீராக்கு' நிறுவனத்தின் மூலமும் சுற்றுசூழலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த விழைகிறோம். மரங்கள் நடுவதோடு மட்டுமின்றி, அவற்றைப் பராமரிப்பது, வளம்குன்றா வாழ்க்கைமுறை போன்றவற்றை மக்களிடம் ஊக்குவித்துப் பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதே எங்களின் நோக்கம்," என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Read Entire Article