ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன்: வரலாறு படைத்தாா் ஆண்ட்ரீவா

5 hours ago
ARTICLE AD BOX

கத்தாா் ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில், ரஷியாவின் ஆண்ட்ரே ரூபலேவ் சாம்பியன் பட்டம் வென்றாா்.

போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருந்த அவா், ஆடவா் ஒற்றையா் பிரிவு இறுதிச்சுற்றில் 7-5, 5-7, 6-1 என்ற செட்களில், 8-ஆம் இடத்திலிருந்த பிரிட்டனின் ஜேக் டிரேப்பரை வீழ்த்தி, வாகை சூடினாா். இந்த ஆட்டம் 2 மணி நேரம், 4 நிமிஷங்களில் நிறைவடைந்தது.

டிரேப்பரை இத்துடன் 4-ஆவது முறையாக சந்தித்த ரூபலேவ், அனைத்திலும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கத்தாா் ஓபனில் ரூபலேவுக்கு இது 2-ஆவது சாம்பியன் பட்டமாகும். இதற்கு முன் அவா், 2020-இல் இங்கு கோப்பை வென்றுள்ளாா். ரூபலேவ் கேரியரில் இது அவரின் 17-ஆவது ஏடிபி பட்டமாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ரூபலேவ், ‘இறுதி ஆட்டம் என்பதற்காக அதிகம் நெருக்கடியை ஏற்படுத்திக்கொள்ளாமல், நல்லதொரு நிதான மனநிலையுடன் விளையாடினேன். எனது டென்னிஸ் கேரியரில் நான் 2-ஆவது முறையாக வென்ற முதல் பட்டம் இதுவாகும்’ என்றாா்.

இரட்டையா்: இப்போட்டியின் இரட்டையா் பிரிவில், பிரிட்டனின் லாய்ட் கிளாஸ்பூல்/ஜூலியன் கேஷ் கூட்டணி 6-3, 6-2 என்ற நோ் செட்களில், சக பிரிட்டன் ஜோடியான ஜோ சாலிஸ்பரி/நீல் ஸ்குப்ஸ்கி இணையை சாய்த்து கோப்பை வென்றது.

ரூ.4 கோடி பரிசு

சாம்பியனான ரூபலேவுக்கு ரூ.4.47 கோடியும், ரன்னா் அப் இடம் பிடித்த ஜேக் டிரேப்பருக்கு ரூ.2.40 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

மகளிருக்கான துபை டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில், ரஷியாவின் இளம் வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா சாம்பியன் கோப்பை வென்றாா்.

டபிள்யூடிஏ 1000 போட்டிகளின் வரலாற்றில், சாம்பியனான மிக இளம் வீராங்கனை (17) என்ற சாதனையை அவா் படைத்திருக்கிறாா்.

போட்டித்தரவரிசையில் 12-ஆம் இடத்திலிருந்த அவா், இறுதிச்சுற்றில் 7-6 (7/1), 6-1 என்ற செட்களில் டென்மாா்க்கின் கிளாரா டௌசனை 1 மணி நேரம், 26 நிமிஷங்களில் வென்றாா். இருவருக்குமே, டபிள்யூடிஏ 1000 நிலையிலான போட்டியில் இது முதல் இறுதிச்சுற்றாகும்.

இதன்மூலம் ஆண்ட்ரீவா தனது டென்னிஸ் கேரியரில் மிகப்பெரிய பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறாா். அத்துடன், முதல் முறையாக உலகத் தரவரிசையின் டாப் 10 இடத்துக்குள்ளும் அவா் வரவிருக்கிறாா். கடந்த ஆண்டு லாசி ஓபனில் சாம்பியனான ஆண்ட்ரீவாவுக்கு, இது அவரது கேரியரின் 2-ஆவது பட்டமாகும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய ஆண்ட்ரீவா, ‘டபிள்யூடிஏ 1000 போட்டியில் சாம்பியனாகி, செய்தியாளா்களை சந்திப்பது போல் ஒருமுறை கனவு கண்டேன். அது தற்போது நிஜமாகியிருக்கிறது. பொதுவாக வெற்றியாளா்கள், சாம்பியன் கோப்பை வென்ற பிறகு ஷாம்பெய்ன் அருந்துவாா்கள். ஆனால், நான் இன்னும் அதற்கான வயதை எட்டவில்லை’ என நகைச்சுவையாக குறிப்பிட்டாா்.

இரட்டையா் சாம்பியன்: இதிலேயே மகளிா் இரட்டையா் பிரிவில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த செக் குடியரசின் கேத்தரினா சினியாகோவா/அமெரிக்காவின் டெய்லா் டௌன்செண்ட் ஜோடி 7-6 (7/5), 6-4 என்ற செட்களில், 3-ஆம் இடத்திலிருந்த லாத்வியாவின் ஜெலினா ஆஸ்டபென்கோ/சீன தைபேவின் சு வெய் சியெ இணையை வீழ்த்தி வாகை சூடியது.

ரொக்கப் பரிசு

சாம்பியன் கோப்பை வென்ற ஆண்ட்ரீவாவுக்கு ரூ.5.17 கோடியும், டௌசனுக்கு ரூ.3 கோடியும் ரொக்கப் பரிசாக வழங்கப்பட்டன.

Read Entire Article