ஆணிகளால் ஆயுளை இழக்கும் மரங்கள்…

9 hours ago
ARTICLE AD BOX

காஞ்சிபுரம்: நமது நாட்டில் போக்குவரத்து வசதிகள் போதுமானதாக இல்லாத காலத்தில், சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான நிழல் தரும், கனி தரும் மற்றும் பழம் தரும் மரங்களை நட்டு பராமரித்து வந்தனர். அந்த காலத்தில் போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த காரணத்தால் நடை பயணமாகவும், சைக்கிள் மற்றும் மாட்டு வண்டி மூலம் பயணம் செய்த காலத்தில், ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்லும் பயணிகள் மற்றும் பொதுமக்கள் சாலையோர மரத்தடிகளின் நின்று இளைப்பாரி விட்டு செல்வார்கள். உணவு கட்டிக்கொண்டு (கட்டுசோறு) வரும் பொதுமக்கள், மரத்தடி நிழலில் அமர்ந்து சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுத்த பின் மற்றொரு ஊருக்கு பயணம் செய்வார்கள். இதனால், சாலையோர மரங்களால் பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு மிகுந்த பயனுள்ளதாக அமைந்தது. அந்த காலத்தில் ஏராளமான புளிய மரங்கள் நடப்பட்டு, புளியமரம் காய்கின்ற நேரங்களில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் புளிமரங்கள் பழங்கள் ஏலம் விட்டு அரசுக்கும் வருவாய் ஈட்டி வந்தனர்.

அப்போது, சாலை இருபுறங்களிலும் ஒவ்வொரு மரத்துக்கும் நம்பர் போட்டு பொதுப்பணித்துறையும், நெடுஞ்சாலைத்துறையும் பராமரித்து வந்தனர். ஆனால், இன்று நாகரிக உலகில் மற்றும் சாலை விரிவாக்கம் என்ற பெயரில் என ஏராளமான மரங்கள் வெட்டப்பட்டு, 4,6,8 வழி சாலைகள் என பலபல சாலைகளாக காட்சியளித்தாலும், தற்போதுள்ள சாலைகள் முழுவதும் வெட்ட வெளியாக காட்சியளிக்கிறது. இதனால், சுற்றுச்சூழல் பாதிக்கிறது. பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மீதமுள்ள எஞ்சிய மரங்களை நாம் காப்பாற்ற வேண்டும் என்றால், அதற்கு அரசாங்கமும், பொதுமக்களும், பயணிகளும் கூட்டு முயற்சியாக அதை நாம் பாதுகாக்க வேண்டும். ஆனால், மரங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்து நாம் தவறி விட்டோம் என்ற நிலையும் தற்போது ஏற்பட்டு இருக்கிறது.

மீதமுள்ள மரங்கள் முழுவதும் பராமரிப்பின்று காட்சியளிக்கிறது. மேலும், எஞ்சியுள்ள சாலையோர மரங்களில் தனியார் கல்வி நிறுவனங்கள், தனியார் துணிக்கடை உள்ளிட்ட ஏராளமான தனியார் நிறுவனங்கள், சாலை ஓரங்களில் உள்ள மரங்களில் தங்களது விளம்பர பலகைகள் ஆணி அடித்து விளம்பரங்களை அடித்துவிட்டு செல்கின்றனர். இதனால், மீதமுள்ள எஞ்சிய மரங்களும் பட்டுபோய் சாலை ஓரங்களில் மரங்களை இல்லாத நிலை ஏற்படுகிறது.  ஆகவே, உறுதியாக சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் மீது பெயர் பலகைகள், விளம்பர பலகைகள் வைப்பதை தடைசெய்ய வேண்டும். அப்படியும் மீறி நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும் பசுமை ஆர்வலர்களும், விவசாயிகளும், பொதுமக்களும், பயணிகளும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையும் அரசாங்கம் செவி சாய்காத நிலை ஏற்பட்டுள்ளது.

முதலில் ஒரு மனிதன் உயிர்வாழ வேண்டும் என்றால், மரங்கள் இருக்க வேண்டும் என்பதை அவன் மறந்து விடுகின்ற நிலைதான், இது போன்ற சம்பவங்களுக்கு காரணமாகி விடுகிறது. ஆகவே, ஒவ்வொரு மனிதனும் இதை உணர்ந்து மரங்களை மீதமுள்ள மரங்களை பாதுகாக்க நடவடிக்கை ஈடுபட வேண்டும். ஏராளமான மரங்களை நடுவதற்கான நடவடிக்கை தொடர வேண்டும் என்பதுதான் பசுமை ஆர்வலர்களின், விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. ஆகவே, சாலை ஓரங்களில் வெட்டப்பட்டுள்ள ஏராளமான மரங்களுக்கு பதிலாக மூன்று மடங்கு மரங்களை நடுவதற்கு பொதுப்பணி துறையும், நெடுஞ்சாலை துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அபராதம் விதிக்க வேண்டும்
காஞ்சிபுரம் மாவட்ட மரம் வளர்ப்பு சங்க தலைவர் மரம் மாசிலாமணி கூறியதாவது: மரங்கள் வெட்டுவதை தடைசெய்ய வேண்டும். போதுமான மரங்களை நட வேண்டும் என்று காஞ்சிபுரத்தில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், மற்ற கூட்டங்களிலும் நான் தொடர்ந்து பேசி வலியுறுத்தி வருகிறேன். குறிப்பாக, சாலையோர மரங்களில் ஆணி அடிப்பது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, தனியார் கல்லூரி நிறுவனங்களும் கிறிஸ்துவ சபையினர் தான் அதிகளவில் செய்வது வேதனை அளிக்கிறது. இப்படி, ஆணி அடித்த மரங்களில் கிளைகள் உடையும் அபாயமும், நாளடைவில் மரங்கள் பட்டுப்போகின்ற நிலைமை ஏற்படும்.

இதை முதலில் மரங்கள் மீது ஆணி அடிக்க கூடாது என்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தி, பின்னர் மரங்களில் ஆணி அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மீறினால் அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும், கல்வி நிறுவனங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்று பாடம் மட்டும் எடுத்தால் போதாது. சாலை ஓரங்களில் ஆணி அடிக்கக்கூடாது என்பதை அவர்கள் மறந்து விடுகின்றனர் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மரத்தை மதிக்காத மனிதர்கள்
நதிகள் பாதுகாப்பு மற்றும் விவசாய சங்க நிறுவனர் பழையனூர் மணி கூறுகையில், ‘சாலையோரத்தில் உள்ள மரங்கள் நிழல் தருவது மட்டுமல்லாமல், தூய்மையான காற்றின் மூலம் நமக்கு தினம் தினம் உயிர் கொடுத்துக் கொண்டுள்ளது. இத்தகைய அதிக பலன்கள் தரும் மரங்களை சமீப காலமாக சேதப்படுத்துவது அதிகரித்து வருகிறது. ஒருபுறம் சமூக ஆர்வலர்களும், தொண்டு நிறுவனங்களும் ஒன்று திரண்டு மரம் நடும் விழா மற்றும் வாரம் 100 மரம் நடும் விழா போன்ற நிகழ்ச்சிகள் மூலம், பல்வேறு இடங்களில் மரத்தை நடவு செய்து பராமரித்து வருகின்றனர்.

ஆனால், அதற்கு நேர் மாறாக காஞ்சிபுரம் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருபுறம் உள்ள மரங்களில் கல்வி நிலையங்கள் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்பவர்கள், ஓட்டல் நிர்வாகங்கள் தனியார் கல்வி நிலையங்கள் சார்பில் அதிகளவில் விளம்பர அட்டைகள் மரத்தில் ஆணி அடித்து பொருத்தப்படுகின்றன. இதனால் மரங்களின் ஆயுள் குறைந்து விரைவில் மரக்கிளைகள் முறிந்து பட்டுப்போகும் நிலை ஏற்படுகிறது. அதிக பலன் தரும் மரங்கள் மீது இத்தகைய சுயலாபத்திற்காக விளம்பரம் செய்து பலனடையும் நிறுவனங்கள் மீது நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தற்போது நடவு செய்ய வேண்டிய மரங்கள்
கொனொகாட்ர வாகை, தூங்கு மூஞ்சி காட்ரவாகை, பெத்தோடியும், கில்மோர், தமிமியா என 5 வகை மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது நடவு செய்ய வேண்டிய மரங்கள்: வேப்பமரம், புங்க மரம், மகிழும், மருதம், கடம்பம், மந்தாரை, இலுப்பை, வில்வம், அத்தி, பாதாம், நாவல், அரசன், ஆலன், இச்சி போன்ற மரங்களை நடலாம்.

The post ஆணிகளால் ஆயுளை இழக்கும் மரங்கள்… appeared first on Dinakaran.

Read Entire Article