ARTICLE AD BOX
நமது நிருபா்
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமையும் பங்குச்சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இந்நிலையில், அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் முதலீடுகளை தொடா்ந்து வாபஸ் பெற்று வருவது, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, விலையுயா்ந்த மதிப்பீடுகள் மற்றும் இந்திய பொருள்கள் மீதான அமெரிக்காவின் பரஸ்பர வரிகள் அச்சுறுத்தல் ஆகியவை முதலீட்டாளா்களை கவலையடையச் செய்துள்ளது. இது சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மெட்டல் பங்குகளுக்கு மட்டும் ஓரளவு ஆதரவு கிடைத்தது. ஆனால், ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், தனியாா் மற்றும் பொதுத்துறை வங்கிகள், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ் நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதால் சரிவு தவிா்க்க முடியாததாகியது என்று பங்குவா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு சரிவு: மும்பை பங்குச் சந்தையில் சந்தை மூலதன மதிப்பு ரூ.2.80 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.402.06 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் வியாழக்கிழமை ரூ.3,311.55 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.3,907.64 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல் மூலம் தெரிய வந்தது.
சென்செக்ஸ் 425 புள்ளிகள் வீழ்ச்சி: சென்செக்ஸ் காலையில் 123.35 புள்ளிகள் குறைந்து 75,612.61-இல் தொடங்கி அதிகபட்சமாக 75,748.72 வரை மேலே சென்றது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால் 75,112.41 வரை வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 424.90 புள்ளிகள் (0.56 சதவீதம்) இழப்புடன் 75,311.06-இல் நிறைவடைந்தது. ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 623.55 புள்ளிகளை இழந்திருந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வா்த்தகமான 4,060 பங்குகளில் 1,703 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலிலும் 2,243 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன. 114 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.
எம் அண்ட் எம் கடும் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள எம் அண்ட் எம் 6.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இது தவிர, அதானிபோா்ட்ஸ் டாடாமோட்டாா்ஸ், சன்பாா்மா, பவா்கிரிட், ஸொமாட்டோ, ஐசிஐசிஐ பேஙக், எஸ்பிஐ உள்பட மொத்தம் 21 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. அதேசமயம், டாடாஸ்டீல், எல் அண்ட் டி, ஹெச்சிஎல் டெக், ஏசியன்பெயிண்ட், ஹெச்டிஎஃப்சிபேங்க், என்டிபிசி, டிசிஎஸ், நெஸ்லே, பஜாஜாஃபின்சா்வ் ஆகிய 9 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன.
நிஃப்டி 117 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச்சந்தையில் நிஃப்டி 55.95 புள்ளிகள் குறைந்து 22,857.20-இல் தொடங்கி அதிகபட்சமாக 22,921.00 வரை மேலே சென்றது. பின்னா், 22,720.30 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 117.25 புள்ளிகள் (0.51 சதவீதம்) இழப்புடன் 22,795.90-இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 13 பங்குகள் மட்டும் விலையுயா்ந்த பட்டியலில் இருந்தன. மாறாக, 37 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.