ARTICLE AD BOX
சத்தீஸ்கர் மாநிலத்தில் பள்ளிக்கூட கழிப்பறையில் ஆசிரியரைக் குறிவைத்து வேதியல் வெடிகுண்டு வைத்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிளாஸ்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் கழிப்பறையில் கடந்த பிப்.21 அன்று சோடியம் மெட்டல் எனும் வேதியல் பொருளைக் கொண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது. இந்த சம்பவத்தில் அதே பள்ளியில் பயிலும் 4 ஆம் வகுப்பு சிறுமி ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் அப்பள்ளிக்கூடத்தின் சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் அந்த பள்ளியில் பணிபுரியும் பெண் ஆசிரியர் ஒருவர் மீதான பகையினால், அவரை பழிவாங்கும் எண்ணத்தில் 8ஆம் வகுப்பு பயிலும் 3 சிறுமிகள் உள்பட 5 மாணவர்கள் இணைந்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இது கட்டாயம்! செய்யாவிட்டால்?
முன்னதாக, சோடியம் மெட்டல் எனும் வேதியல் பொருளை தண்ணீரில் நனைத்தால் வெடிக்கும் என்பதை யூ டியூப் மூலம் தெரிந்துக்கொண்ட அந்த மாணவர்கள், அதில் ஒருவரது உறவினரின் அடையாளத்தைப் பயன்படுத்தி அதனை இணையத்தின் வாயிலாக வாங்கியுள்ளனர்.
பின்னர், அதை அவர்களது பள்ளிக்கூட கழிப்பறையினுள் ஆசிரியரைக் குறிவைத்து பொருத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக அந்த கழிப்பறையை பயன்படுத்திய 4ஆம் வகுப்பு சிறுமி பிளஷை அழுத்தி அதனுள் தண்ணீர் செலுத்தியபோது அது வெடித்து படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளான 5 மாணவர்களில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், 5வது மாணவர் வெளி ஊருக்கு சென்றிருப்பதினால் அவரது வருகைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.