ARTICLE AD BOX
சென்னை : மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வர் மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படுவார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று(பிப். 25) செய்தியாளர்களுடன் பேசும்போது தெரிவித்தார்.
புதிய கல்வி கொள்கை, மும்மொழிக் கொள்கை எதிர்க்கப்படுவது குறித்தும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மக்கள் மருந்தகம் திட்டம் குறித்தும் விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: ”பாரதீய ஜனதா கட்சி 2026-ஆம் ஆண்டு தேர்தலை நோக்கி வெற்றிகரமாகச் சென்று கொண்டிருக்கிறது. திமுக அரசு தமிழகத்தில் மொழி அரசியல் செய்து வருகிறது.
தமிழகத்தில் பாலியல் குற்றங்கள், அரசு மருத்துவர்கள், ஆசிரியர்களின் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல்வர் மு. க. ஸ்டாலினோ.. மருத்துவமும், கல்வியும் எங்களது இரு கண்கள் என்கிறார். ஆனால், அவர் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. தனியார் மருத்துவமனையில்தான் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அமைச்சர்களின் மகன்களும் பேரன்களும் எங்கு படிக்கின்றனர் என்பது அனைவருக்குமே தெரியும். திமுக அரசு மொழி விஷயத்தில் அப்பட்டமாக நடித்துக் கொண்டிருக்கிறது. இதை நாங்கள் வெளிப்படுத்துவோம்.
நாங்கள்(பாஜக) இன்னொரு மொழியைத் திணிக்கவே இல்லை. ‘பாரதீய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்கள் தமிழ் மொழிக்கு எதிரானவர்கள்’ போன்றதொரு தோற்றத்தைக் கொண்டுவருகிறார்கள். இந்நேரத்தில், பாரதப் பிரதமர் உள்பட நாங்கள் எல்லோருமே தமிழ் மொழியைத்தான் போற்றுகிறோம் என்பதையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.”
“ரயில் நிலையங்களில் உள்ள பலகைகளில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பவற்றை அழிக்கிறீர்களே! வெளிமாநிலங்களைச் சேர்ந்தோர் இங்கு வரும்போது என்ன செய்வார்கள்? குறுகிய மனப்பான்மையுடன் செயல்படுகிறார்கள்; உங்கள் வீட்டுப் பிள்ளைகளின் நோட்டுப் புத்தகங்களில் ஹிந்தியில் எழுதுகிறார்களே அதையும் அழிப்பீர்களா? தயவுசெய்து, உங்கள் இரட்டை வேடத்தை நிறுத்துங்கள்.”
“ஒரு செங்கலைக் கூட உருவ முடியாது என்று சொல்லிக்கொண்டு பயந்துகொண்டே அவர்கள்(திமுக) நடமாடுகிறார்கள். பயப்படவில்லை என்று சொல்லிக்கொண்டு அவர்கள் பயந்துகொண்டு திரிகிறார்கள் என்பதுதான் என்னுடைய கருத்து.
ஒரேயொரு செங்கலை மட்டுமல்ல.. சட்டமன்றத்தில் செங்கோலையே நிறுவுவோம் என்று நாங்கள் கூறியிருக்கிறோம். அதனால் நாங்களா? அவர்களா? என்று பார்க்கலாம்.”
”இதேபோலத்தான், தெலங்கானாவிலும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாத முதல்வரை மக்கள் வீட்டுக்கு அனுப்பினர். இதையேதான், இவர்களும் பின்பற்றுகிறார்கள். மத்திய அரசின் திட்டங்கள் மாநிலத்திற்கு வேண்டும்தானே? முதலில், முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் இருந்து வரக் கூடிய நல்ல திட்டங்களை ஏற்க வேண்டும். விஸ்வகர்மா திட்டம், நீட் இப்படி மத்திய அரசுத் திட்டங்கள் பலவற்றையும் ஏன் வேண்டாம் என்கிறீர்கள்.”
”மக்கள் மருந்தகம் என்ற பெயரில் பிரதமர் கொண்டுவந்த திட்டத்தை முதல்வர் மருந்தகம் என்று மாற்றி வைத்திருக்கிறீர்கள். மருந்து கொடுப்பது நல்ல திட்டம்தான்.. ஆனால், தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களைக் காப்பியடிப்பதைத் தவிர எதுவும் நடைபெறவில்லை” என்றார்.