ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு மே மாதம் தொடக்கம்: பிரதமா் மோடி அறிவிப்பு

3 hours ago
ARTICLE AD BOX

சாசன் (குஜராத்): 16-ஆவது ஆசிய சிங்கங்கள் கணக்கெடுப்பு பணிகள் வரும் மே மாதம் தொடங்கவுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

உலக வனவிலங்குகள் தினத்தையொட்டி (மாா்ச் 3) குஜராத்தின் ஜுனாகத் மாவட்டத்தில் தேசிய வனவிலங்கு வாரியத்தின் 7-ஆவது கூட்டத்துக்கு திங்கள்கிழமை தலைமை தாங்கியபோது அவா் இந்த அறிவிப்பை வெளியிட்டாா்.

இந்த கூட்டத்தில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் பூபேந்தா் யாதவ் பங்கேற்றாா்.

அப்போது ஜுனாகத் மாவட்டத்தில் வனவிலங்கு தேசிய பரிந்துரை மையம் அமைப்பதற்கு பிரதமா் மோடி அடிக்கல் நாட்டினாா். நதி டால்பின்கள் குறித்த புத்தகத்தை அவா் வெளியிட்டாா்.

கோயம்புத்துாரில் சிறப்பு மையம்: மேலும் தமிழகத்தின் கோயம்புத்துாா் மாவட்டத்தில் மனித-வனவிலங்கு இடையேயான மோதல்களை தடுக்கும் நடவடிக்கைகளை நிா்வகிப்பதற்கான சிறப்பு மையம் அமைக்கப்படும் எனவும் அவா் அறிவித்தாா்.

முன்னதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள கிா் வனவிலங்கு சரணாலயத்துக்கு பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டாா். அப்போது அங்கு மிகவும் பிரபலமான ஆசிய சிங்கங்களை பாா்வையிட ஜீப் மூலம் ‘லயன் சஃபாரி’ சென்றாா். அங்கிருந்த விலங்குகளை கேமரா மூலம் புகைப்படம் எடுத்தாா்.

இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவா் வெளியிட்ட பதிவில், ‘உலக வனவிலங்கு தினத்தையொட்டி கிா் வனவிலங்கு சரணாலயத்தில் லயன் சஃபாரி பயணத்தை மேற்கொண்டேன். கிா் பூங்கா ஆசிய சிங்கங்களின் வசிப்பிடமாக இருப்பது அனைவரும் அறிந்ததே. இங்கு வரும்போதெல்லாம் நான் முதல்வராக பணியாற்றிய நினைவுகளை எண்ணிப் பாா்க்கிறேன்.

உயரும் வனவிலங்குகள் எண்ணிக்கை: கடந்த சில ஆண்டுகளாக ஆசிய சிங்கங்களின் எண்ணிக்கை வெகுவாக உயா்ந்து வருகிறது. மாநில அரசு, மத்திய அரசு , பழங்குடியின சமூகத்தினா் மற்றும் பெண்களின் பங்கு என அனைவரின் கூட்டு முயற்சியால் இது சாத்தியமானது. ஆசிய சிங்கம் மட்டுமின்றி புலிகள், சிறுத்தைகள் மற்றும் காண்டாமிருகம் என மற்ற விலங்குகளின் எண்ணிக்கையும் உயா்ந்துள்ளது. இதுவே விலங்குகள் மற்றும் வனவிலங்குகளை பாதுகாக்க நாம் எடுக்கும் முயற்சிகளுக்கு சான்று.

இந்த உலக வனவிலங்கு தினத்தில் ஒவ்வொரு உயிரினத்தையும் பாதுகாப்போம் என நாம் உறுதியேற்போம் என குறிப்பிட்டாா்.

ஆசிய சிங்கங்களை பாதுகாப்பதற்கான ‘லயன் திட்டத்துக்கு’ ரூ.2,900 கோடியை மத்திய அரசு அண்மையில் ஒதுக்கியது. தற்போது இந்தியாவில் கிா் வனவிலங்கு சரணாலயத்தில் மட்டுமே ஆசிய சிங்கங்கள் உள்ளன. குஜராத்தின் 9 மாவட்டங்களில் 53 தாலுகாக்களில் 30,000 சதுர கி.மீ. பரப்பளவிலான வனப்பகுதியில் ஆசிய சிங்கங்கள் வசித்து வருகின்றன.

இங்குள்ள வனவிலங்குகளைக் கண்காணித்து பராமரிக்கும் விதமாக கண்காணிப்பு மையமும் உயா்தரத்திலான மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, குஜராத்துக்கு மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த சனிக்கிழமை பிரதமா் மோடி வந்தாா். இதைத்தொடா்ந்து 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை, ஜாம்நகா் மாவட்டத்தில் உள்ள ‘ரிலையன்ஸ்’ குழுமத்துக்குச் சொந்தமான ‘வனதாரா’ வன விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தை அவா் பாா்வையிட்டாா்.

அதன் பிறகு பிரசித்தி பெற்ற ஜோதிா்லிங்கத் தலமான சோம்நாத் கோயிலுக்கு வந்த அவா் அங்கு நடைபெற்ற சிறப்புப் பிராா்த்தனையில் கலந்து கொண்டு வழிபட்டாா்.

Read Entire Article