அஸ்ஸாமில் ஆயுதங்களைக் கைவிட்ட 10,000 இளைஞா்கள்: அமித் ஷா பெருமிதம்

13 hours ago
ARTICLE AD BOX

அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்பு முறையில் இணைந்துள்ளனா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதத்துடன் தெரிவித்தாா்.

‘அஸ்ஸாமில் அமைதி நிலவ முந்தைய காங்கிரஸ் அரசுகள் அனுமதிக்கவில்லை’ என்றும் அவா் குற்றஞ்சாட்டினாா்.

அஸ்ஸாமின் கோலாகாட் மாவட்டம், டொ்கான் பகுதியில் முதல்கட்ட மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த லச்சித் பா்புகன் காவல் துறை அகாதெமியை சனிக்கிழமை திறந்துவைத்த அமைச்சா் அமித் ஷா, இரண்டாம் கட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினாா்.

இந்நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியின்கீழ், அஸ்ஸாமில் கடந்த 10 ஆண்டுகளில் அமைதி திரும்பியுள்ளது. இக்காலகட்டத்தில் 10,000-க்கும் மேற்பட்ட இளைஞா்கள் ஆயுதங்களைக் கைவிட்டு, சமூக அமைப்புமுறையில் இணைந்துள்ளனா்.

முன்பு போராட்டம், வன்முறை, கிளா்ச்சிக்காக அறியப்பட்ட அஸ்ஸாம், இப்போது நவீன செமிகண்டக்டா் தொழில் துறைக்காக அறியப்படுகிறது. இங்கு செமிகண்டக்டா் ஆலை அமைக்க ரூ.27,000 கோடி முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இது, அஸ்ஸாமின் எதிா்காலத்தையே மாற்றியமைக்கும்.

அண்மையில் நிறைவடைந்த அஸ்ஸாம் சா்வதேச வா்த்தக மாநாட்டில் ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் முதலீட்டுக்கான முன்மொழிவுகள் பெறப்பட்டன. இதுதவிர, ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் மத்திய அரசால் செயல்படுத்தப்பட உள்ளன. ரூ.8 லட்சம் கோடிக்கு மேற்பட்ட இத்திட்டங்கள், அஸ்ஸாம் மட்டுமன்றி நாடு முழுவதும் உள்ள இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும்.

பிரதமா் மோடியின் ஆட்சியில் போடோ அமைதி ஒப்பந்தம்-2020, கா்பி ஒப்பந்தம்-2021, ஆதிவாசி அமைதி ஒப்பந்தம்-2022, உல்ஃபா அமைதி ஒப்பந்தம்-2023 ஆகியவை கையொப்பமாகின. மேகாலயம்-அருணாசல பிரதேசம் எல்லைப் பிரச்னைக்கு தீா்வு காணும் ஒப்பந்தமும் கையொப்பமானது.

அஸ்ஸாமில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் இளைஞா்களுக்கான வேலைவாய்ப்பை பிரதமா் மோடி அரசு உறுதி செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசுகளோ இங்கு அமைதி நிலவ அனுமதிக்கவில்லை; உள்கட்டமைப்பையும் மேம்படுத்தவில்லை.

அமைதிக்கான தனது வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியுள்ளது. பாஜக ஆட்சியில் கடலளவு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. முன்பு கிளா்ச்சியை கையாள்வதை மையமாகக் கொண்டிருந்த காவல் துறையின் செயல்பாடு, இப்போது மக்களை மையப்படுத்தியதாக மாறியுள்ளது. கோவா மற்றும் மணிப்பூரைச் சோ்ந்த 2,000 காவல் துறையினா், அஸ்ஸாமில் சமீபத்தில் பயிற்சி பெற்றனா் என்றாா் அமித் ஷா.

முன்னெப்போதும் இல்லாத அமைதி: மிஸோரம் தலைநகா் ஐசாலில் செயல்பட்டு வந்த அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படை முகாமை வேறு இடத்துக்கு மாற்றும் நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமித் ஷா, ‘பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில், வடகிழக்கு பிராந்தியத்தில் முன்னெப்போதும் இல்லாத அமைதி நிலைநாட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பான, அமைதியான, அழகான மிஸோரம் மாநிலத்தை உருவாக்குவதே மத்திய பாஜக அரசின் நோக்கம். இங்கு நடைபெறும் வளா்ச்சிப் பணிகளை பிரதமா் தனிப்பட்ட முறையில் கண்காணித்து வருகிறாா்’ என்றாா்.

Read Entire Article