ARTICLE AD BOX
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைத் தலைவரும் கவிஞருமான நந்தலாலா உடல் நலக்குறைவால் காலமானார். இதய அறுவை சிகிச்சைக்காக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருடைய உடல் இன்று இரவு திருச்சி கொண்டு வரப்பட்டு நாளை நல்லடக்கம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினருமான கவிஞர் நந்தலாலா அவர்கள் மறைந்த செய்தி அறிந்து மிகவும் வருத்தமுற்றேன். தமிழ்நாட்டின் புத்தகத் திருவிழாக்கள். முற்போக்கு மேடைகள், தொலைக்காட்சி விவாதங்கள், பட்டிமன்றங்கள் எனக் கவிஞர் நந்தலாலா அவர்களின் குரல் ஒலிக்காத மேடையே இல்லை எனும் அளவுக்கு அனைத்து உணர்ச்சிகளையும், அரிய தகவல்களையும் தமது பேச்சில் வெளிப்படுத்தும் திறம் பெற்றவர் அவர். காவிரிக்கரையின் மைந்தனான கவிஞர் நந்தலாலா அவர்கள் தமது ஊரான திருச்சியின் மீது கொண்ட தீராக்காதலுக்கு. ’திருச்சிராப்பள்ளி: ஊறும் வரலாறு’ நூலே சான்றாகும். அவரது ஆற்றல் தமிழ்ச் சமூகத்துக்கு மேலும் பயனளிக்க வேண்டும் என்று கடந்த ஆண்டு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினராகவும் அவரை நியமித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
தந்தை பெரியார் மீது பெரும் பற்றும், பேரறிஞர் அண்ணா மீது பெருமதிப்பும், தலைவர் கலைஞர் மீது மிகுந்த அன்பும் கொண்டிருந்தவர் கவிஞர் நந்தலாலா அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் குறித்து. ’தாம் வாழ்ந்த காலம் முழுதும். மானமும் அறிவும்; துணிச்சலும் செயலுமாக வாழ்ந்தவர் கலைஞர். உரிமை மீட்புப் போரில் அவரே நமக்கு என்றும் போர்வாள்’ என்று உண்மை இதழில் அவர் எழுதிய சொற்களை மறக்க முடியாது. என் மீதும் மிகுந்த மரியாதையும் பாசமும் கொண்டிருந்தார். எனது பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு பரந்த மனத்தோடும் அன்போடும் வாழ்த்திப் பேசியதையும் இவ்வேளையில் நினைவுகூர்கிறேன். மேலும் பல்லாண்டுகள் தமிழ்ச் சமூகத்துக்கு அருந்தொண்டாற்றவிருந்த அவர் மறைந்துவிட்டார் என்பது வேதனையளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தினருக்கும். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர் சங்கத்தின் தோழர்களுக்கும். தமிழன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
மதுரை மக்களவை உறுப்பினரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசன் தன்னுடைய இரங்கல் பதிவில், “நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக்கொடிருக்கிறேன். தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக, சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக்கொண்டிருந்த குரல் ஓய்ந்தது. பூவிரியும் காவிரியின் புன்சிரிப்பை, அடர்த்தியும் அழகும் கொண்ட தீந்தமிழின் புதுமொழியை தமிழகத்திற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்” எனத் தெரிவித்துள்ளார்.
கவிஞர் நந்தலாலா எழுதிய 'திருச்சி - ஊறும் வரலாறு' என்ற தொடர், விகடன் டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, பின்னர் புத்தகமாக வெளியானது. இதில் திருச்சி பற்றிய பல தகவல்களைக் காண முடியும். வங்கியில் இருந்தபடியே மேடைப் பேச்சு, இலக்கியம் எனக் கொடிகட்டிப் பறந்த நந்தலாலா, பின்னரும் உலகம் முழுவதும் தனது இலக்கியச் சிறகை விரித்தார். பெரும்பாலும் பட்டிமன்றங்களில் தனது நகைச்சுவைப் பேச்சால் அனைவரையும் கவர்ந்திழுத்து கைதட்டால் பெற்றுவிடுவார். இவர், ஒருசில திரைப்படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார்.