ARTICLE AD BOX
தமிழ்நாடு - மருத்துவத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பொள்ளாச்சியின் எம்.சி.வி நினைவு இ.என்.டி (E.N.T) மருத்துவமனையின் டாக்டர் எம்.சி.வி (MCV) ஆனந்த், கோயம்புத்தூரின் கால்டர் ஹெல்த் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் ஹரிசரண் மற்றும் திலக் சக்கரவர்த்தியுடன் இணைந்து இந்தியாவின் முதல் தொடர்பற்ற நரம்பு கண்காணிப்பு சாதனத்தை உருவாக்கியுள்ளனர்.
முகம் மற்றும் கழுத்து அறுவை சிகிச்சைகளில் பயன்படுத்தப்படும் இந்த சாதனம், நரம்புகளை நேரடி தொடுதலின்றி கண்டறிந்து அறுவை சிகிச்சைகளை மேலும் பாதுகாப்பாகவும், நுட்பமாகவும் மாற்றுகிறது.
எம்.சி.வி (MCV) நினைவு இ.என்.டி (ENT) மருத்துவமனையின் டாக்டர் ஆர்யா ஸ்ரீ நாயர், இந்த புதிய சாதனத்தை மெட்ரானிக் நிறுவனத்தின் என்.ஐ.எம் (NIM) மானிட்டர் போன்ற வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சாதனங்களுடன் ஒப்பிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், இந்த இந்திய சாதனம் வெளிநாட்டு சாதனங்களின் துல்லியத்துடன் சமமாக இருப்பதை நிரூபித்தது. இந்த முக்கியமான ஆய்வு டாக்டர் ஆர்யாவிற்கு இந்திய அளவில் சிறந்த விருதுகளில் ஒன்றான ஆர்.ஏ.எஃப் (RAF) கூப்பர் விருதைப் பெற்றுத்தந்தது. அறுவை சிகிச்சைகளின் போது, குறிப்பாக முகம் மற்றும் கழுத்து போன்ற நுணுக்கமான இடங்களில் நரம்புகளை சேதப்படுத்தாமல் பாதுகாப்பது மிக முக்கியம்.
நரம்பு கண்காணிப்பு சாதனங்கள், நரம்புகளை கண்டறிந்து அறுவை சிகிச்சையை மேம்பட செய்வதுடன், பக்கவாதம் அல்லது தளர்ச்சி போன்ற பிரச்சினைகளை தடுக்கும். இந்த புதிய சாதனம் பழைய சாதனங்களைப் போல அடிக்கடி மாற்ற வேண்டிய விலையுயர்ந்த சென்சார் மற்றும் எலக்ட்ரோட்களைக் கொண்டிருக்கவில்லை. இது வீடியோ முறையைப் பயன்படுத்தி, நரம்புகளைக் கண்டறிகிறது. இது அதே நேரத்தில் மலிவானதும், சுலபமாகவும் உள்ளது.இன்றுவரை, இந்திய மருத்துவமனைகள் நரம்பு கண்காணிப்பு சாதனங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து வந்தன. இதனால் நாடு வருடத்துக்கு ரூ7 முதல் ரூ14 கோடி வரை செலவழித்து வந்தது.
தற்போது இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த சாதனம், வெளிநாட்டு சாதனங்களை விட ஐந்து மடங்கு மலிவானது. இதனால் சிறிய மருத்துவமனைகளுக்கும் இந்த நவீன தொழில்நுட்பம் எளிதில் கிடைக்கும்.
இந்த சாதனம் அறுவை சிகிச்சைகளை மேலும் பாதுகாப்பாகவும், நவீனமாகவும் மாற்றும். இது இந்திய மருத்துவத் துறைக்கு பெருமை சேர்க்கும்,என டாக்டர் MCV ஆனந்த் தெரிவித்தார். இந்த கண்டுபிடிப்பு இந்தியாவின் மருத்துவ மேம்பாட்டுக்கு ஒரு முக்கிய படியாகவும் மருத்துவத்தின் செலவை குறைப்பதற்கும் உதவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பி.ரஹ்மான் கோவை மாவட்டம்