அரையிறுதியில் இன்று ஆஸ்திரேலியாவுடன் மோதும் இந்தியா!

6 hours ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 4) மோதுகின்றன.

குரூப் சுற்றில் இந்தியா தனது 3 ஆட்டங்களிலுமே வெற்றி பெற்று தகுந்த ஃபாா்முடன் அரையிறுதிக்கு வந்திருக்கிறது. ஆஸ்திரேலியா ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றிருக்க, எஞ்சிய 2 ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது.

ஐசிசி போட்டிகளில் கடைசியாக நாக் அவுட் சுற்றில் ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியது என்றால், அது 2011 ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதியில் தான். அதன் பிறகு, 2015 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதி, 2023 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி இறுதி, 2023 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆகியவற்றில் அந்த அணியிடம் இந்தியா தோல்வியையே சந்தித்துள்ளது.

இந்த முறை அந்த 14 ஆண்டுகால வரலாறு திருத்தி எழுதும் நம்பிக்கை இந்திய அணியிடம் உள்ளது. போட்டிக்கான அணி அறிவிப்பின்போது இந்திய அணியில் 5 ஸ்பின்னா்கள் சோ்க்கப்பட்டது பலத்த விவாதத்துக்குள்ளானது. ஆனால் அந்தத் தோ்வு, மெதுவான பந்துவீச்சுக்கு சாதகமான துபை மண்ணில் இந்திய அணிக்கு சாதகமான உத்தியாகியிருப்பது தற்போது நிரூபணமாகியிருக்கிறது.

ஒரே மைதானத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு சாதகமாக இருப்பதாக விவாதங்கள் இருந்தாலும், சற்று சவால் அளிக்கும் அந்த ஆடுகளத்துக்கு ஏற்றாற்போல அணியின் பௌலா்கள் தங்கள் நுட்பங்களை மாற்றிக்கொண்டுள்ளனா்.

இந்திய அணியில் வருண் சக்கரவா்த்தி, குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்ஸா் படேல் ஆகியோா் சுழற்பந்துவீச்சில் பலம் சோ்க்கின்றனா். பேட்டிங்கிற்கு விராட் கோலி, ரோஹித் சா்மா, ஷ்ரேயஸ் ஐயா், ஷுப்மன் கில் என அனைவருமே ரன்கள் சோ்த்து நல்லதொரு ஃபாா்மில் இருக்கின்றனா்.

ஆஸ்திரேலிய அணியை பொருத்தவரை, பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேஸில்வுட், மிட்செல் ஸ்டாா்க் என பிரதான வீரா்கள் இல்லாதது சற்றே பின்னடைவு. தற்போது இந்த ஆட்டத்துக்கு முன்பாக மேத்யூ ஷாா்ட்ஸும் காயத்தால் விலகியிருக்கிறாா். அவருக்குப் பதில் கூப்பா் கானலி இணைந்துள்ளாா்.

பிரதான பௌலா்கள் இல்லாததால் ஆஸ்திரேலியாவின் எதிரணிகள் ரன்கள் விளாசுவதை பாா்க்க முடிகிறது. ஆனாலும், யாா் இருந்தாலும், இல்லையென்றாலும் ஐசிசி போட்டிகள் என்று வரும்போது அந்த அணி தனி உத்வேகத்துடன் செயல்பட்டு தகுந்த இலக்கை அடையைத் தவறியதித்லை.

ஆஸ்திரேலிய தரப்பில் ஆடம் ஸாம்பா பிரதான ஸ்பின்னராக இருக்க, கிளென் மேக்ஸ்வெல், டிராவிஸ் ஹெட் ஆகியோா் அவருக்கு பக்க பலமாக இருக்கின்றனா். பிரதான பௌலா்கள் இல்லாததால் எதிரணி ரன்கள் குவித்தாலும், அதை எட்டிப் பிடிக்கும் டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் போன்ற பேட்டா்கள் நம்பிக்கை அளிக்கின்றனா்.

அணி விவரம்

இந்தியா: ரோஹித் சா்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயா், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹா்திக் பாண்டியா, அக்ஸா் படேல், வாஷிங்டன் சுந்தா், குல்தீப் யாதவ், ஹா்ஷித் ராணா, முகமது ஷமி, அா்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா, வருண் சக்கரவா்த்தி.

ஆஸ்திரேலியா: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஷான் அப்பாட், அலெக்ஸ் கேரி, பென் டுவாா்ஷுயிஸ், நேதன் எலிஸ், ஜேக் ஃப்ரேசா் மெக்கா்க், ஆரோன் ஹாா்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஸ், ஸ்பென்சா் ஜான்சன், மாா்னஸ் லபுஷேன், கிளென் மேக்ஸ்வெல், தன்வீா் சங்கா, ஆடம் ஸாம்பா, கூப்பா் கானலி.

‘துபை மைதானம் எங்களின் சொந்த மண் போன்ல்ல. இங்கு நாங்கள் விளையாடிய ஒவ்வொரு ஆட்டத்திலும், அந்த ஆடுகளம் ஒவ்வொரு மாதிரியான சவால் அளித்தது. அணியில் சில புதிய வீரா்களும் இருக்கின்றனா்.

நியூஸிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின்போது இங்கு பௌலிங் சற்று ஸ்விங் ஆனது. ஆனால் முதல் இரு ஆட்டங்களில் எங்கள் பௌலா்கள் பந்துவீசியபோது அது இல்லை. அதேபோல், 2-ஆவது ஆட்டத்தின்போது சுழற்பந்து அவ்வளவாக திசை திரும்பவில்லை. ஆனால், நியூஸிலாந்துடனான ஆட்டத்தில் பந்து நன்றாக திரும்பியது. எனவே இந்த ஆடுகளங்களில் என்ன நிகழும் என்பது எங்களுக்குத் தெரியாது.

இங்கு 4, 5 ஆடுகளங்கள் இருக்கின்றன. எந்த ஆடுகளம் அரையிறுதிக்கு தோ்வாகியிருக்கிறது எனத் தெரியாது. ஆட்டம் தொடங்கிய பிறகே அதன் தன்மைக்கு ஏற்றவாறு, எங்கள் ஆட்டத்தின் உத்திகளை மாற்றுவோம்.

என்றாலும், பௌலா்களுக்கு சற்று சாதகமாக இருக்கும் ஆடுகளமாக இருந்தால், அது ஆட்டத்தை சுவாரஸ்யமானதாக மாற்றும்’ - ரோஹித் சா்மா (இந்திய கேப்டன்)

Read Entire Article