ARTICLE AD BOX
Published : 23 Feb 2025 08:29 AM
Last Updated : 23 Feb 2025 08:29 AM
அரை இறுதிக்கு முன்னேறும் முனைப்பில் இந்தியா: பாகிஸ்தானுடன் இன்று மோதல்

துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நடப்பு சாம்பியனான முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் அரை இறுதி சுற்றுக்கு முன்னேறும். இது நிகழ்ந்தால் பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்து தொடரில் இருந்து வெளியேறும்.
இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியிருந்தது. பாகிஸ்தான் அணி தனது முதல் ஆட்டத்தில் 60 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டிருந்தது. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடைசியாக இரு அணிகளும் கடந்த 2017-ம் ஆண்டு தொடரின் இறுதிப் போட்டியில் மோதியிருந்தன. இதில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று கோப்பையை வென்றிருந்தது.
இம்முறை இதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்கக்கூடும். கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் சிறந்த பார்மில் உள்ளனர். இங்கிலாந்து அணிக்கு எதிரான இருதரப்பு தொடரில் 2 அரை சதம், ஒரு சதம் விளாசிய ஷுப்மன் கில் சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் 101 ரன்கள் விளாசி அசத்தினார். அவரிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த ஆட்டம் வெளிப்படக்கூடும். ரோஹித் சர்மா 36 பந்துகளில் 41 விளாசி சிறந்த அடித்தளம் அமைத்துக் கொடுத்திருந்தார்.
அதே செயல் திறனை இருவரும் தொடர்வதில் முனைப்பு காட்டக்கூடும். அதேவேளையில் கடந்த ஆட்டத்தில் தடுமாறிய விராட் கோலி பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். நேற்றைய பயிற்சியின் போது அவர், சுழற்பந்து வீச்சாளர்களை அதிகம் எதிர்கொண்டு பேட்டிங் செய்தார். இதற்குரிய பலனை பெறுவதில் விராட் கோலி ஆர்வம் காட்டக்கூடும். ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், அக்சர் படேல், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா என நடுவரிசை மற்றும் பின்வரிசை பேட்டிங் பலமாக உள்ளது.
இதில் ஹர்திக் பாண்டியா எப்போதும் முக்கியமான ஐசிசி போட்டிகளில் பாகிஸ்தானுக்கு எதிராக தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தனி வீரராக போராடி ஹர்திக் பாண்டியா போராடியிருந்தார். ஆனால் முக்கியமான கட்டத்தில் அவர், ரன் அவுட் செய்யப்பட்டிருந்தார். அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல முடியாமல் போன ஏமாற்றத்தை அவர், இன்றைய ஆட்டத்தில் ஈடுகட்டுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் முகமது ஷமி பார்முக்கு திரும்பி இருப்பது பலம் சேர்த்துள்ளது. வங்கதேச அணிக்கு எதிராக 5 விக்கெட்கள் வீழ்த்திய அசத்திய அவர், பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும். ஷமிக்கு உறுதுணையாக ஹர்ஷித் ராணா செயல்படக்கூடும். சுழற்பந்து வீச்சில் ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ் ஆகியோர் பலம் சேர்க்கக்கூடும். இன்றைய ஆட்டத்தில் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி களமிறங்க வாய்ப்பு உள்ளது.
முகமது ரிஸ்வான் தலைமையிலான பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றாக வேண்டும் நெருக்கடியுடன் களமிறங்குகிறது. நியூஸிலாந்திடம் முதல் ஆட்டத்தில் தோல்வி அடைந்ததால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே அரை இறுதி சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற நெருக்கடியான நிலையில் பாகிஸ்தான் அணி உள்ளது. அந்த அணியில் காயம் காரணமாக முன்னணி பேட்ஸ்மேனான ஃபகர் ஜமான் விலகி இருப்பது அணியின் பலவீனத்தை அதிகரிக்கக்கூடும்.
கடந்த ஆட்டத்தில் 320 ரன்கள் இலக்கை துரத்திய நிலையில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அஸம் மந்தமாக விளையாடி 90 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்தது கடும் விமர்சனங்களுக்கு வழிவகுத்தது. ரன் ரேட் அதிகம் தேவைப்பட்ட நிலையிலும் பாபர் அஸம் எந்தவித முயற்சியும் எடுக்காதது அவரது திறன் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதனால் அவர், மிகுந்த நெருக்கடியுடன் இந்திய அணியை எதிர்கொள்கிறார்.
நியூஸிலாந்து அணிக்கு எதிரான தாக்குதல் ஆட்டம் மேற்கொண்டு 69ரன்கள் சேர்த்த குஷ்தில் ஷாவிடம் இருந்து மீண்டும் ஒரு சிறந்த இன்னிங்ஸ் வெளிப்படக்கூடும். சல்மான் அலி ஆகா, ரிஸ்வான் ஆகியோர் பொறுப்பை உணர்ந்து விளையாடும் பட்சத்தில் இந்திய அணிக்கு சவால் கொடுக்க முயற்சிக்கலாம்.
பந்துவீச்சை பொறுத்தவரையில் கடந்த ஆட்டத்தில் கடைசி 10 ஓவர்களில் பாகிஸ்தான் வீரர்கள் ரன்களை வாரி வழங்கியிருந்தனர். இதில் ஹாரிஸ் ரவூப் 83 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார். ஷாகிப் அப்ரிடி, நசீம் ஷா ஆகியோரும் தலா 60 ரன்களுக்கு மேல் வழங்கியிருந்தனர். இது ஒருபுறம் இருக்க துபாய் ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணி வீரர்கள் தகவமைத்துக் கொண்டுள்ளதால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள் நெருக்கடியை சந்திக்கக்கூடும்.
அணிகள் விவரம் - இந்தியா: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான் (கேப்டன்), சல்மான் அலி ஆகா, பாபர் அஸம், இமாம் உல் ஹக், கம்ரான் குலாம், சவுத் ஷகீல், தயாப் தாஹிர், பஹீம் அஷ்ரஃப், குஷ்தில் ஷா, உஸ்மான் கான், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாஹீன் ஷா அப்ரிடி.
ரிஷப் பந்த்துக்கு காய்ச்சல்: இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பந்த்துக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர், நேற்றைய பயிற்சியில் கலந்துகொள்ளவில்லை. முதல் போட்டியில் ரிஷப் பந்த் களமிறக்கப்படவில்லை. கே.எல்.ராகுலே விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறக்கப்பட்டார். விளையாடும் லெவனில் ரிஷப் பந்த்தின் இடம் உறுதி இல்லை என்பதால் அவர், பயிற்சியில் கலந்துகொள்ளாதது பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
இமாம் உல் ஹக் எப்படி? - காயம் காரணமாக ஃபகர் ஜமான் விலகி உள்ள நிலையில் அவருக்கு பதிலாக பாகிஸ்தான் அணியில் இடது கை பேட்ஸ்மேனான இமாம் உல் ஹக் சேர்க்கப்பட்டுள்ளார். அவர், இந்திய அணிக்கு எதிராக இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி 12.80 சராசரியுடன் 65 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 36 ஆகும். இந்த 5 ஆட்டங்களிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்திருந்தது.
300 முதல் 325 சிறந்த ஸ்கோர்: இந்திய அணியின் துணை கேப்டனும் தொடக்க வீரருமான ஷுப்மன் கில் கூறும்போது, “துபாயில் உள்ள நிலைமைகளைக் கருத்தில் கொண்டால் 300 முதல் 325 ரன்களுக்கு மேல் சிறந்த ஸ்கோராக இருக்கும். மேலும் பனிப்பொழிவு இல்லாததால், இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிக அழுத்தத்தில் இருக்கும். நாங்கள் நிச்சயமாக நேர்மறையான மற்றும் ஆக்ரோஷமான கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம். மிடில் ஓவர்களில் சிறப்பாக பேட்டிங் செய்யும் அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது. பனிப்பொழிவு இல்லாததால் டாஸ் ஒரு பொருட்டல்ல.
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி எதையும் மாற்றாது. நாங்கள் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற விளையாடுகிறோம். அழுத்தத்தை சிறப்பாக கையாள்வதில்தான் விஷயம் உள்ளது. இந்தியா - பாகிஸ்தான் பெரிய போட்டி, ஆனால் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி மிகப்பெரியது. நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறோம், ஆனால் பாகிஸ்தானை குறைந்த அணியாக கருத மாட்டோம்” என்றார்.
துபாயில் எப்படி? - துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இதற்கு முன்னர் பாகிஸ்தான் அணியுடன் இரு முறை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி விளையாடி உள்ளது. இந்த 2 ஆட்டத்திலுமே இந்திய அணி வெற்றி கண்டுள்ளது.
நேருக்கு நேர்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் இந்திய அணி 2 ஆட்டங்களிலும், பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
சுழல் பயம்? - இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி ஒருநாள் போட்டிகளில் சமீபகாலமாக லெக் ஸ்பின்னில் விக்கெட்டை பறிகொடுத்து வருகிறார். இங்கிலாந்து தொடரில் ஆதில் ரஷீத்திடம் வீழ்ந்த அவர், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிஷாத் ஹொசைன் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் பாகிஸ்தான் அணியில் உள்ள அப்ரார் அகமது விராட் கோலிக்கு சவால் அளிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தனது தவறுகளை திருத்திக் கொள்ளும் முயற்சியாக நேற்றைய பயிற்சிக்கு சக அணி வீரர்கள் வருவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்னதாகவே மைதானத்தை வந்தடைந்த விராட் கோலி, 2 லெக் ஸ்பின்னர், 2 ஆஃப் ஸ்பின்னர்களை வீசச் செய்து வெகுநேரம் பேட்டிங் பயிற்சி செய்தார்.
நேரம்: பிற்பகல் 2.30
இடம்: துபாய்
நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்போர்ட்ஸ் 18
Follow
FOLLOW US
அன்பு வாசகர்களே....
இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.
CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!
- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை
தவறவிடாதீர்!
- ராஜஸ்தானில் 6 பேரை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து காங். எம்எல்ஏ.க்கள் பேரவையில் விடியவிடிய போராட்டம்
- அலுவல் ரீதியாக முதல்முறையாக பிரதமர் மோடியை சந்தித்தார் டெல்லி முதல்வர் ரேகா குப்தா
- மூதாட்டியின் கால்களை வெட்டி நகைகள் கொள்ளை: முகமூடி கும்பல் அட்டகாசம்
- ஒகேனக்கல் காவிரியில் ஒகேனக்கல் நீர்வரத்து 1,200 கனஅடியாக சரிவு