ARTICLE AD BOX
சென்னை : தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1 முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைப் பணிகளை ஒவ்வொரு பள்ளியிலும் மார்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும். இதற்காக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரைகள் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் முன்பருவக் கல்வியை நிறைவு செய்யும், ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை அந்தந்த பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக் கல்வி திட்டம் தன்னார்வலர்கள் மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்கள் அல்லது வேறு பள்ளிகளில் இருந்து, அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பிலோ அல்லது பிற வகுப்புகளிலோ அரசுப் பள்ளிகளுக்கு சேர விரும்பும் மாணவர்களுக்கான இடங்களை பள்ளிகள் வழங்கிட வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தல் வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் கிடைக்கும் சேவைகள், நலத்திட்டங்கள் மற்றும் பல்வேறு உதவித் தொகைகள் குறித்த விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் மாணவர்களுக்கும் எடுத்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அங்கன்வாடி மையங்களில் இருந்து வெளிவரும் குழந்தைகளில் ஒருவர் கூட விடுபடாமல் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சேர வைக்க வேண்டும்.
2025-26ஆம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை விகிதத்தை கணிசமான அளவில் உயர்த்திட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், அரசுப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர் விவரங்களை கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (எமிஸ்) இணையதளத்தில் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யவும் அறிவுறுத்த வேண்டும்.